நண்பருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தி கேட்டு வைத்தியசாலை விரைகிறேன். வைத்தியசாலை வாசலிலேயே பிறந்த குழந்தைகளுக்கு வாங்கிச்செல்ல என்று பொருட்களை விற்றுக்கொண்டிருப்பார்கள். ஒரு கிப்டைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வார்டுதேடி அலைந்து, கண்டுபிடித்துப் போனால், நண்பர் வெளியில் யாருடனே தொலைபேசியில் சிரித்துக்கொண்டிருந்தார். மகன் பிறந்த சந்தோசத்தில் சிரிக்கும் தகப்பன். வாழ்த்துச்சொன்னேன். உள்ளே என்று கையைக் காட்டினார். வார்டுக்குள் நுழைந்தேன். கட்டிலில் நண்பி. கலைந்த தலை. களைத்த முகம். கண்ணெல்லாம் சொருகிக்கிடந்தது. என்னைக் கண்டதும் “வாங்கோ” என்று சன்னமாக அழைத்தார். “வாழ்த்துகள்” என்றேன். “பயங்கரமாகப் படுத்திவிட்டான், கள்ளன்” என்றார். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய பிரசவம் தாமதமாகிக்கொண்டேயிருந்தது. வைத்தியர்களும் இயற்கையாகவே நிகழட்டும் என்று கத்தி வைக்க மறுத்துவிட்டார்கள். எதிர்பார்ப்பு, பயம், வலி, அலைச்சல் என்று எல்லாமே கலந்த மூன்று நாட்கள். இத்தனையையும் சத்தம்போடாமல் நிகழ்த்திய அண்ணர் அருகே தொட்டிலில் நிம்மதியாக நித்திரைகொண்டபடிக் கிடந்தார். ஒரு வருடத்தில் அவர் ஆட்களை இனம்கண்டு சிரிப்பார். நான்காம் வயதில் முழுமையாகப் பேசத்தொடங்குவார். பத்துவயதில் சில்மிஷங்கள். பதினேழு வயதில் முதற்காதல். இருபத்தொரு வயதில் முதன்முதலாகத் தனியாகச் சென்று மேற்படிப்போ, வேலையோ செய்யலாம். இருபத்தைந்து வயதில் தன்னுடைய வாழ்க்கைத்துணையைத் தேடலாம். முப்பது வயதில் காலம்முழுதும் நினைவுகூறும்வகையில் அண்ணர் எதையாவது சாதிக்கவுங்கூடும். இப்போது அண்ணர் அந்த எண்ணங்கள் எதுவுமே இல்லாமல் நித்திரை கொண்டுகொண்டிருந்தார். அந்தத் தூக்கமும் சுவாசத்தில் ஏறியிறங்கும் நெஞ்சும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும் இமைகளும் விரல்களும் நிம்மதி என்னும் சுகந்தத்தை அந்த வார்டு முழுதுமே நிறைத்துக்கொண்டிருந்தது.
மேலும் வாசிக்க »