சில மாதங்களாகவே லியோ டோல்ஸ்டாயின் நாட்டார் சிறுகதை ஒன்று என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அதுபற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கையில்தான் கோமகன் அண்ணாவின் ஞாபகம் வந்தது. அவருடைய நடு சஞ்சிகைக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்டு மாதக்கணக்கில் கொடுக்கவில்லை. இதைக்கொடுக்கலாம் என்று தோன்றியது.
“நடு”. பிரான்சிலிருந்து வெளிவருகின்ற காலாண்டு இலக்கிய சஞ்சிகை. பிரான்சிலிருந்து என்று சொல்வது தேவையற்றது. கோமகன் அண்ணா எங்கிருந்தாலும் அங்கிருந்து “நடு” வெளிவரும் என்று நினைக்கிறேன். முழு முயற்சியும் அவருடையதுதான். தளத்தை மதுரன் வடிவமைத்துக்கொடுக்கிறார். எழுத்தாளர்களை அணுகிக் கட்டுரை கேட்பது, ஞாபகமூட்டுவது, மீள ஞாபகமூட்டுவது, பண்பாக ஞாபகமூட்டுவது, மரியாதையுடன் ஞாபகமூட்டுவது, எரிச்சலுடன் ஞாபகமூட்டுவது, கோபத்தைக்காட்டாமல் ஞாபகமூட்டுவது, ஆக்கம் கிடைத்தபின் எழுத்துப்பிழைகள் திருத்துவது, கொஞ்சம் அப்படி இப்படி இருந்தால் இதை எப்படி வெளியிடாமல் தவிர்ப்பது என்று குழம்புவது, தொகுப்பது, வெளியானபின்னர் எழுதியவர்கள் கொடுக்கும் அலப்பறைகளை சமாளிப்பது! என்று ஒவ்வொரு வெளியீடும் கோமகன் அண்ணாவுக்கு கொல்லக்கொண்டுபோவதுபோலத்தான். எது இவரை, இவரைப்போன்ற சிறுபத்திரிகை ஆசிரியர்களை இயக்குகிறது என்று சரியாகத்தெரியவில்லை. ஏதோ ஒரு சின்னத் தணல் எங்கோ ஒரு மூலையிலிருந்து இவர்களைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கும். பிறப்பிலிருந்து அந்தத்தணல் கூடவரும். அதுதான் வாசிக்க வைப்பது. எழுத வைப்பது. செயற்பட வைப்பது. கோமகன் அண்ணாவின் தணல் இலக்கியவெளியில் அடிக்கிற பருவமழைகளுக்கும் குளிருக்கும் தணியாமல் எரியட்டும்.