நீண்ட நாவலின் இறுதிப்பக்கங்கள் நகர மறுக்கின்றன. இதுவரை எழுதிய வார்த்தைகள் எல்லாம் புற்றீசல்போலப் புறப்பட்டுச்சென்று விளக்குக்குமிழியில் முட்டிமோதிக்கொள்கின்றன. அவற்றைத் தடுத்து நிறுத்துவதா? அல்லது நாவலை எழுதி முடித்துவிடுவதா? என் செய்வேன்?
கதைகளைச் சொல்லாமல் விட்டால் என்ன என்று எக்கணம் தோன்றுகின்றது. இது ஒரு அபாயகரமான சமிக்ஞை என்று தெரியும். ஆனாலும் நான் இதுவரை சொல்லாத கதைகளே என் சிறந்த கதைகள் என்று தோன்றுகின்றது. சொல்லியபின்னர் பருவமெய்திய பறவைகள்போல கதைகள் என்னை விட்டுப் பிரிந்துபோகின்றன. அவை திரும்பி வருவதேயில்லை. அவ்வப்போது கடந்து செல்கையிலும் ஒரு வழிப்போக்கர்போலக்கூட அவை என்னை இனம்கண்டு சிரித்துவைப்பதில்லை. கதைகளை எழுதாமல் இனி நம்மோடேயே கூட வைத்திருக்கலாம் என்று சந்திராவிடம் சொன்னேன். அவளும் அது சரியே என்று ஒப்புக்கொண்டாள்.