பார்த்திபன் மறுபடியும் டொய்லட்டுக்குள் அவசரமாக ஓடினான்.
சிறுவயதிலிருந்தே அவனுக்கு இதுவொரு பெரும் பிரச்சனை. ஏதாவது பரீட்சை என்றால். மேடையில் ஏறிப் பரிசு வாங்குவது என்றால். வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும்போது அடுத்த பெயர் அவனது என்றால். தவமணி வாத்தி ரவுண்ட்ஸ் வந்தால். யாரேனும் வீடுகளுக்கு விஸிட் சென்றால். விருந்தினர்கள் வீட்டுக்கு வந்தால். வீதியில் செல்லும்போது தெரிந்தவர்கள் எதிர்ப்பட்டால். தூரத்தே பொலீஸ் வாகனம் நின்றால். டெண்டுல்கர் சேஸிங் செய்தால். டெலிபோன் அடித்தால். இப்படி எந்தச் சின்ன டென்சன் என்றாலும் எங்கிருந்தோ ஒரு பூரான் நுழைந்து குடல்வழியே ஊர ஆரம்பித்துவிடுகிறது. ஒவ்வொரு தடவையும் அவன் புதிதாகக் காதல் வயப்படும்போதும் வயிற்றைக்குழப்பி, ‘இந்தா இப்போதே கலக்கி அடிக்கிறேன்’ என்று அது பாவ்லா காட்டும். ஆனால் உள்ளே போய்க்குந்தினால் சனியன் பூரான் சருகுக்குள் போய்ப்பூந்துவிடும். சிறிதுநேரம் முக்கிவிட்டு இது வேலைக்காகாது என்று முடித்து வெளியே வந்தால் திரும்பவும் பூரான் மெதுவாக ஊர்ந்து வெளியேவரும். பார்த்திபன் இந்தச் சிக்கலுக்கு வைத்தியரிடமும் சென்று ஆயிரத்தெட்டு பரிசோதனைகளும் செய்துபார்த்துவிட்டான். கான்சராக இருக்குமோ என்று கொலனோஸ்கோப்பிகூடச் செய்தாயிற்று. ம்ஹூம். ஈற்றில் ஐ.பி.எஸ் என்று விளக்கம் கொடுத்தார்கள். அன்க்ஸயட்டி. ஸ்ட்டிரஸ். பிஎச்டிக்கு இது சகஜம். நிறைய பழம் சாப்பிடுங்கள். தண்ணி குடியுங்கள். சில மருந்துகள். ஆலோசனைகளுக்குக் குறைச்சல் இல்லை.