"This is a bondage, a baited hook.There's little happiness here,next to no satisfaction,all the more suffering & pain."Knowing this, circumspect,wander alonelike a rhinoceros.”
"இது ஒரு கட்டு, இரையுள்ள தூண்டில்.இங்கு இன்பம் குறைவு,கொஞ்சமும் திருப்தி இல்லை,துக்கமும் துன்பமுமே அதிகம்."இதை அறிந்து, எச்சரிக்கையோடு இருந்துதனித்து நடமாடுகாண்டாமிருகத்தைப் போல.”
கடந்துபோன இரண்டாயிரத்துப் பதினெட்டு சற்று விசித்திரமான ஒரு ஆண்டு. எதிலுமே பிடித்தமில்லாமல், எவற்றிலுமே நம்பிக்கை கொள்ளாமல் எல்லாவற்றிலுமிருந்து விடுபட்ட மனநிலை மேலோங்கியிருந்த ஆண்டு இது. என் தொலைப்பேசி முழுதும் தவறவிடப்பட்ட அழைப்புகள் நிறைந்திருந்த வருடம். தகவல் பெட்டிகளும் மின்மடல்களும் வாசிக்கப்படாமல் முடங்கியிருந்த காலம். வாசிப்பில் பிடித்தம் அருகிக்கொண்டு வந்ததும் எழுதும் எழுத்தை வெளியிடும் ஆர்வம் குறைந்ததும் இதே காலப்பகுதியில்தான். சமூக வலைத்தளங்கள் மீதான வெறுப்பும் மேலோங்க ஆரம்பித்ததும் அப்போதுதான். மனிதர்களின் போலித்தனங்கள் மேலும் மேலும் பட்டவர்த்தனமாகிக்கொண்டிருந்த நேரம். எல்லோரையும் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி, காடு [மீள] ஒரு பாலைவனமாக ஆகிக்கொண்டிருந்தது. மாதமொருமுறை செல்கின்ற வாசகர் வட்டச்சந்திப்புத்தான் ஒரே கொழுகொம்பு. அதையும் தவிர்க்கலாமோ என்ற எண்ணம் ஆரம்பித்திருந்த தருணம். வாசிப்பை எதற்காக மற்றவருடன் பகிரவேண்டும். என் கிணறு எனக்குக் கடல் அல்லவா?