எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும்.
நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல நயினாதீவார் எல்லோருக்கும் கருவிலேயே கடலுணவு ரெசிப்பிகள் எல்லாமே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. இதைவிட நாட்டுக்கோழி, ஆட்டிறைச்சி, ஆமைக்கறி என இன்னொரு லிஸ்ட் இருக்கிறது. அடிப்படையில் நாங்கள் மச்சத்துக்கு அவ்வப்போது கொஞ்சமே மரக்கறி சேர்த்து சாப்பிடும் ஆட்கள். அதில்கூட கொம்பினேசன்கள் எங்களுக்கு முக்கியம். விளமீன் குழம்பு என்றால் கீரைத் துவையல் வேண்டும். ஒட்டி மீன் குழம்பு என்றால் பூசனிக்காய்க்கறி வேண்டும். ஆட்டிறைச்சிக்கறி என்றால் கத்தறிக்காய் வெள்ளைக்கறி வேண்டும். ஒடியற்கூழுக்கு தேங்காய்ச்சொட்டு போடாவிட்டால் அது யுத்தக்குற்றம். சூடை மீன் பொரித்தால் புட்டு இரண்டு நீத்துப்பெட்டிகள் அதிகமாக அவிக்கவேண்டும். இப்படி இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தாரே தீவார் அன்று.