Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

டைனோசர் முட்டை

$
0
0


பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனிதா நாயரின் 'லேடிஸ் கூப்'நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதையில் மார்கரட் போல்ராஜ் என்றொரு பெண் பாத்திரம் வரும். அவருக்கு, வீட்டில் கொடுமை செய்யும், சுயநலக்கார, பெண்கள் மீது பலவீனம் கொண்ட, ஸ்மார்ட் லுக்கிங் உள்ள ஒரு கணவன். மார்கரட் தன் கணவனை எப்படி வழிக்குக் கொண்டுவந்து அவனை ஒன்றுமேயற்றவனாக்குகிறார் என்பதுதான் அந்தக் கதை. நாவலில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே வருகின்ற மார்கரெட் பல ஆண்டுகளாக நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தார். அந்தப் புள்ளி பல வருடங்களாக உப்புத்தண்ணிக்க போட்ட நெல்லிக்காய் மாதிரி ஊறிக்கொண்டே கிடந்தது. பல தடவைகள் என் வாசக வட்ட நண்பர்களோடு மார்கரட் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய நாள் ஜீவியோடு இதுபற்றி உரையாடியிருக்கிறேன். அந்தப் புள்ளியை எடுத்து விளையாடவேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. தன்னைவிட சுப்பீரியராக இருக்கக்கூடிய ஒரு துணையை எப்படி அணு அணுவாக மழுங்கடிப்பது என்கின்ற புள்ளி. ஆனால் அதற்குச் சரியான கதை ஒன்று அமையவில்லை.

திடீரென்று ஒருநாள் அந்த மார்கரட் ஆணாகியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தேன். அதன் பின்னர் நிகழ்ந்தது எல்லாமே உன்மத்தம். பாத்திரங்களை உருவாக்கிப் பரமபதம் விளையாடுவது என்பது எழுத்து மட்டுமே கொடுக்கக்கூடிய அனுபவம். வாசிப்புக்கூட இன்னொருவர் விளையாடும் விளையாட்டைப் பார்த்து அனுபவிப்பதுபோலத்தான். ஆனால் நாங்களே எழுதும்போது நிலைமையே வேறு. ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கென சில குணங்குறிகளை நெறிப்படுத்திவிட்டால் பின்னர் கதையில் அவை என்ன செய்யும் என்பதை எழுதுபவர்கூட சமயங்களில் தீர்மானிக்கமுடியாது. தம் குணத்துக்கேற்ப அவை கதையை நகர்த்த ஆரம்பித்துவிடும். அப்போது அவற்றுக்குப் பின்னாலே சென்று விடுப்புப் பார்க்கும் உற்சாகம்தான் எழுதுபவரிடம் இருக்கும். இந்தக் கதையில் அது எனக்குக் கிடைத்தது.
 
இது ஒரு நெடுங் கதை. அதை எழுதிய அனுபவத்தையும் உவகையையும் பகிரவேண்டும்போல இருந்தது. அவ்வளவுதான். சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.
 
கதையின் பெயர் 'டைனோசர் முட்டை'.
 
அகழ்இதழில் வெளிவந்திருக்கிறது. ஒரு சின்ன டிரெய்லர்
 

//நான் அவசரப்பட்டுத் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. ஒரு டொக்டருக்கு இன்னமும் அழகான இளவயதுப்பெண் கிடைக்காமலா போயிருக்கும்? நான் என் கனிஷ்ட மருத்துவர்களுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரையும் அதுதான். அவசரப்பட்டுக் காதலித்துவிடாதீர்கள். உங்கள் வகுப்பு நண்பி, தாதி, சக மருத்துவர் என எவரையும் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். அத்தனைத் தமிழர்களும் சீதனத்துடன் அழகான பெண்களை வளர்த்துவைத்து எம்மைப்போன்ற வைத்தியர்களிடம் கொடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள். பெண்ணையும் கொடுத்து காசையும் கொடுக்கும் அதிசயமெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு எங்குமே நிகழாத ஒன்று. ஏன் அவசரப்படுவான்? பூதத்துக்குத் தீவனம் கொண்டுபோன பீமன்போல ஒவ்வொரு சீதனம் நிரம்பிய வண்டில்களில் ஒவ்வொரு அழகி உட்கார்ந்திருக்கிறாள். தெரிவு செய்து உண்பது மாத்திரம் உங்கள் வேலை. தீவனம் முடிய முடிய சமைத்துப்போடக்கூடியவள் என்றால் இன்னமும் திறம்.//




Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>