பால்வீதி, அன்றோமீடா மற்றும் நெபுலா பெருவெளிகளில் வலிமை மிகு சக்திகளின் எழுச்சி என்பது எப்போதுமே புரட்சிகளின் மூலமே அரங்கேறியிருக்கிறது. ஒரு புரட்சி இன்னொரு புரட்சிக்கும், அது மீண்டுமொரு புரட்சிக்கும் வித்திட்டுக்கொண்டே இருக்கிறது. இது பிரபஞ்சத்தின் பெருவெடிப்பு இயக்கத்தை ஒத்தது. சூனியவெளியில் ஆரம்பிக்கும் பெருவெடிப்பு எரிகுளத்தில் தெறித்து பறக்கும் தீமுகிழ்கள் போல பிரவாகம் எடுத்து விரிந்து ஈய்ந்து எல்லை மீறி மீண்டும் சூனியப் புள்ளியை அடையும். அங்கே மீண்டும் பெருவெடிப்புக்கான முன் ஏற்பாடுகள் நிகழும். அது போன்றதே புரட்சியும். இங்கே புரட்சிக்கான தேவை வெளியே சூனிய வெளி. அந்த தேவைவெளியில் புரட்சிக்கான ஆரம்பம் அதிகார கட்டுகளை எதிர்த்து துளிர்விடும். கொஞ்சம் கொஞ்சமாக புரட்சி பெருநதியாக அலைபாயும். அடிமைத்தனத்திலிருந்து கட்டுடைத்து எழுதவதற்காக பீறிடும். புரட்சி மலரும். பின்னர் புரட்சியின் மலர்ச்சி இன்னுமொரு அதிகார மையத்தை உருவாக்கி, அதன்பால் அத்தனை இயக்கங்களும் சடத்துவங்களும் ஈர்க்கப்பட்டு இறுதியில் புரட்சி கட்டுடைந்து மீண்டும் சூனிய வெளியை நோக்கி தள்ளப்படும். இதுவே பிரபஞ்ச இயக்கமாகும். இதுவே புரட்சியின் இயக்கமுமாகும்.
பகுத்தறிவுள்ள மனிதன் என்கின்ற விலங்கினம் எப்போது கூட்டு வாழ்க்கை கட்டமைப்பை தன்னகத்தே அமைத்துக்கொண்டதோ அப்போதே புரட்சியின் முதல் விதை தூவப்பட்டது. முடியாட்சி, குடியாட்சி, கூட்டாட்சி, கம்யூனிசம், ஜனநாயகம், ஏகாபத்தியம் போன்ற ஏக காலத்து ஆட்சி கட்டமைப்புகள் இவ்வகை புரட்சி சங்கிலிகளில் இருந்து உருவானதே. பொருளாதார புரட்சிகளுக்கும் அடிப்படை இதுவே. கார்ல்மார்க்ஸ் அனுமானித்த முதலாளித்துவத்தின் வெடிப்பு நிகழ்ச்சியும் இதன் அடிப்படையிலான ஒரு எதிர்வுகூறலே. இதை இன்னமும் சீர்நோக்கி பார்த்தோமென்றால் இந்த தத்துவத்துக்கும் மார்க்ஸ் சொன்ன சுரவேக கிளர்ச்சிக்கும் ஒரு அதீத ஒற்றுமை இருக்கிறது. மூலதனத்தின் வளர்ச்சியும், திரட்சியும், ஒன்றுகுவிப்பும், எவ்வாறு மென்மேலும் நுண்ணிய உழைப்புப் பிரிவினையையும், பழைய எந்திரங்களை மென்மேலும் கூடுதலாக மேம்படுத்துவதையும், புதிய எந்திரங்களைத் தொடர்ந்து புகுத்துவதையும் கூடவே கொண்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த நடைமுறை எவ்விதக் குறுக்கீடுமின்றி சுர வேகத்தில் மென்மேலும் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடந்தேறுகிறது. இதுவே சுரவேகக் கிளர்ச்சி. இதுபோன்றே ஒவ்வொருதடவையும் புரட்சி நுண்ணிய அளவில் தன்னை திருத்தியமைத்து மீளுருவாக்கம் செய்கிறது. கார்ல் மார்க்ஸ் எழுதிய "கூலியுழைப்பும் மூலதனமும்" என்கின்ற நூல் இகுது பற்றி மேலும் பிரஸ்தாபிக்கிறது. அகுதைப்பற்றி "குடி மயக்க நிலை பகுதி 5 (Hangover part 5)" திரைவிமர்சனத்தின்போது அலசுவோம்.
இப்போது "குரங்குகள் கிரகத்தின் வைகறை (Dawn of the Planet of the Apes)" திரைத்திறனாய்வு பகுப்புரையை விரிவாக்குவோம்.
மேலும் வாசிக்க »