ஒரு ரியாலிட்டி டிவி நிகழ்ச்சி. போட்டியை சூரியா நடத்துகிறார்.
போட்டி இதுதான். உங்கள் முன்னே மூன்று மூடிய அறைகள் இருக்கின்றன. A, B, C. அதிலே இரண்டு அறைகளுக்கு பின்னே எருமை மாடுகள் நிற்கின்றன. ஒரு அறைக்குப்பின்னே இலியானா.
நிற்க, நீங்கள் பெண் போட்டியாளர் என்றால் இலியானாவுக்கு பதிலாக உங்களுக்கு பிடித்த அப்பாஸோ, அமெரிக்க மாப்பிள்ளையோ அல்லது சிவகார்த்திகேயனோ இருக்கிறார் என்று நினைத்துகொள்ளுங்கள். யாராவது சமூக போராளி, சீர்திருத்தவாதி, எப்படி இலியானாவை எருமைமாட்டையும் ஒரே போட்டியில் நிறுத்தலாம்? என்று அறச்சீற்றம் கொண்டு தாலி அறுக்க முடிவு செய்தால் இப்போதே பிரவுசரை குளோஸ் பண்ணிவிட்டு எஸ்கேப்பாகிவிடுங்கள். இங்கே பிரச்சனை யார் என்பது அல்ல. இரண்டு அறைகளுக்குள் இரண்டு ஒரே மாதிரி விஷயம். மூன்றாவதற்குள் இன்னொரு வேறான விஷயம்.
மீண்டும் போட்டிக்கு வருவோம். ஒரு அறைக்குள் இலியானா. ஏனைய இரு அறைகளுக்குள்ளும் எருமை மாடுகள். யார், எது எந்த அறைக்குள் என்று சூரியாவுக்கு தெரியுமே ஒழிய, உங்களுக்கு தெரியாது.
இப்போது உங்களை ஒரு அறையை தேர்ந்தெடுக்குமாறு சூரியா சொல்கிறார். நீங்கள் தேர்ந்தெடுத்த அறைக்குள் இலியானா இருந்தால் அவரோடு ஒருநாள் டேட்டிங் போகலாம். எருமை மாடு சிக்கினால் மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டுபோகவேண்டும். இதுதான் விதிமுறை. குளூ எதுவும் கொடுக்கப்படாது. ஒரு அறையை எழுமாற்றாக தெரிவு செய்யவேண்டும்.
நீங்கள் ஒரு அறையை டக், டிக், டோஸ் போட்டு தெரிவு செய்கிறீர்கள். அதை அறை A என்று வைப்போம். அந்த அறை A இனுள் இலியானா இருப்பதற்கான சான்ஸ் என்ன?
சின்னக்கணக்குத்தான். மூன்றில் ஒரு சான்ஸ். முப்பத்து மூன்று வீதம். ஏனைய இரு அறைகளில் ஒன்றினுள் இலியானா இருக்கும் சாத்தியம் அறுபத்தாறு வீதம். மூன்றில் இரண்டு சான்ஸ். குழப்பமில்லாத பள்ளிக்கால நிகழ்தகவு கணக்கு.
அறை A உங்களுடைய தெரிவாக தீர்மானித்தாகிவிட்டது அல்லவா. இப்போது எஞ்சியிருக்கும் இரண்டு அறைகளில் ஒரு அறையில் எருமை இருக்கிறது என்று சொல்லி அதனை சூரியா திறந்துவிடுகிறார். அதனை அறை C என்று வைப்போம். அப்படியென்றால் மீதமிருக்கும் அறை B யிலோ அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த அறை A யிலோதான் இலியானா இருக்கவேண்டும். A அல்லது B. நீங்கள் தேர்ந்தேடுத்ததோ A. இப்போது சூரியா உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கிறார். உங்களுக்கு விருப்பம் என்றால் உங்கள் தெரிவை அறை A இலிருந்து அறை B க்கு மாற்றலாம் என்று கூறுகிறார்.
நீங்கள் என்ன செய்வீர்கள்? அறை Bக்கு மாறுவீர்களா? அல்லது மாற்றுவதால் எந்தப்பயனும் இல்லை என்று A தான் என்னுடைய பைனல் தெரிவென்று அடித்துக்கூறுவீர்களா?
இலியானா இல்லாட்டி எருமை மேய்ப்பு! நன்றாக யோசியுங்கள். அதற்குள் சில விடயங்களைப்பற்றி கொஞ்சம் ஆராய்வோம்.
மேலும் வாசிக்க »