உங்களைப்பற்றிய சுருக்கமாக வாசகர்களுக்கு அறிமுகம் செய்யுங்களேன்?
பெயர் ஜெயக்குமரன். இடையிடையே போரியல் இடப்பெயர்வுகள் நீங்கலாக, பிறந்து வளர்ந்தது முழுவதும் திருநெல்வேலியில். படித்தது யாழ் பரியோவான் கல்லூரியில். பின்னர் உயர்கல்வியை மொறட்டுவை மற்றும் RMIT பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேன். தற்போது மென்பொருள் பொறியியலாளராக பணிபுரிகிறேன். தொழில் நிமித்தமாக கொழும்பு, சிங்கப்பூர் நகரங்களில் வசித்து தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்தில் வாழ்ந்து வருகிறேன்.
படைப்புத்துறைக்குள் உங்கள் அடியெடுத்து வைப்பு எவ்வாறு நிகழ்ந்தது?
அக்கா சொல்லும் சம்பவமொன்று. எனக்கு இரண்டு வயதாக இருக்கலாம். அக்கா என்னை மடியில் போட்டு கதை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். "ஒரு ஊரிலே ஒரு இராஜகுமாரி இருந்தாள், அவளின் பெயர்.." என்கையில் நான் உடனே "சாந்தி" என்றிருக்கிறேன். சாந்தியக்கா பக்கத்துவீட்டுக்காரி!
பாலர் பாடசாலையில் சம்பந்தர் ஞானப்பால் குடித்த பாடத்தை படித்த நாளன்று நானும் நாலு வரி உல்டா "தோடுடைய செவியன்" எழுதி அம்மாவிடம் "கிழி" வாங்கியிருக்கிறேன். இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டுகள்.
கதை என்று உட்கார்ந்து எழுதி மற்றவர்களும் வாசித்தது பதினோரு வயதில் நிகழ்ந்தது. பதின்மூன்று வயதில் நண்பர்களோடு சேர்ந்து ஒரு புத்தகம் வெளியிட எடுத்த முயற்சி கையெழுத்துப்பிரதியொடு கருகிப்போனது. எழுத்து வீட்டிலே தீண்டத்தகாத வஸ்துவாக பார்க்கப்பட்டது. அந்நாட்களில் கவிதை கிறுக்கப்பட்ட தாள்கள் கோழிப்பீ அள்ளவே பயன்பட்டன.
பல்கலைக்கழக காலத்திலும் பல சிறுகதைகள் எழுதியிருக்கிறேன். கொஞ்சம் சீரியசாக எழுத ஆரம்பித்தது இணையத்தில்தான். ஆரம்பத்தில் www.iamjk.comஎன்ற இணையத் தளத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தேன். அங்கே ஓரளவுக்கு உருப்படியான சிறுகதைகள் எழுதியிருக்கிறேன் என்று நம்புகிறேன். கடந்த நான்கு வருடங்களாக படலை (www.padalay.com) இணையத்தளத்தில் தமிழில் எழுதி வருகிறேன்.
மேலும் வாசிக்க »