Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

வியாழமாற்றம் 04-04-2013 - குப்பை

$
0
0

 

images“என்னடா இன்றைக்கு எழுதுவோம்?” என்று கஜனிடம் கேட்டபோது “ஏதோ ஒரு குப்பையை எழுதி ஒப்பேத்து” என்றான். அவன் சொன்னது போல குப்பையையே ஒரு சவாலாக எடுத்து எழுதிப்பார்க்கலாமா என்று நினைத்துப்பார்க்க குப்பை பற்றிய விஷயங்கள் கோபுரமாய் எழுந்து நின்றது. குப்பையை சாதாரணமாக குப்பை என்று மூக்கைப்பொத்திக்கொண்டு கடந்துபோக முடியாது. எங்கள் கலாச்சாரத்தில் அனேகமான விஷயங்கள் குப்பையில் தான் கிடக்கின்றன. அதை கொஞ்சம் நாற்றத்துடன் ட்ரை பண்ணியிருக்கிறேன். இந்த வாரம் ஒரு குப்பை வாரம்.


யாழ்ப்பாணத்தில் குப்பை!

குப்பைக்கும் பங்கருக்கும் ஏகத்துக்கு தொடர்பு இருக்கும். இந்தியன் ஆர்மி வந்தபோது முதன்முதலில் வெட்டிய பங்கர்; பின் அவர்கள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய காலத்தில் பங்கரின் தேவை இல்லாததால் அது குப்பைக்கிடங்கானது. பின்னர் அவர்கள் போன பின்னர் இலங்கை இராணுவத்துடன் சண்டை. முற்றத்தில் பங்கர். கொஞ்சக்காலத்தில் முன் வீட்டில் புலிகளின் நிதர்சன அலுவலகம் வந்ததால், ரிஸ்க் என்று முன் வளவில் வெட்டிய பங்கரை பின் வளவுக்கு மாற்றினோம். இப்போது முன்னது குப்பைக்கிடங்கு ஆகியது. சந்திரிக்கா வந்து கண்டோஸ், மண்ணெண்ணெய் எல்லாம் அனுப்ப, பதிலுக்கு புலிகளும் வரவேற்று கடிதம் அனுப்ப, சரி இதோட சமாதானம் தான் என்று பின்னாலே இருந்த பங்கரையும் குப்பைக்கிடங்கு ஆக்கினோம். பின்னர் சந்திரிக்கா முன்னேறிப்பாய, மீண்டும் பங்கர். இம்முறை மாமரத்துக்கு கீழே. அதுவும் பின்னர் குப்பைக்கிடங்கு. இந்த பட்டேர்ன் வன்னிக்கு போனபோதும் தொடர்ந்தது.

கோட்டை அடிபாட்டு நேரம் தாவடிக்கு இடம்பெயர்ந்திருந்தோம். ஒரு நாள் மாலை, குப்பைகளை கூட்டி துப்புறவாக்கி பின் வளவில் போட்டு எரித்துவிட்டிருந்தோம். எங்கள் கெட்டகாலம், அன்றைக்கு இரவு ஹெலி ஒன்று, வேறு அலுவல் இல்லையோ என்னவோ எங்கட ஏரியாவையே சுற்றி சுற்றி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்தது. வீட்டுக்கு மேலாலே சன்னங்கள் பரந்தன. நாங்கள் எல்லாம் குசினி அடுப்படி சீமெந்து பிளாட்டுக்கு கீழே விழுந்து படுத்துவிட்டோம். பதினைந்து இருபது நிமிஷமாக இது நடந்தது. சுத்திறது, சுடுறது. சுத்திறது. சுடுறது. என்ன இழவுக்கு என்று தெரியவில்லை. சுற்றுவட்டாரத்தில இயக்கத்திண்ட காம்ப் ஒன்றும் கிடையாது. கொஞ்சநேரம் கழித்து தான், பக்கத்துவீட்டு அண்ணாவுக்கு விஷயம் உறைத்தது. குடிக்கவென்று தண்ணீர் அள்ளி வைத்திருந்த பானையை எடுத்துக்கொண்டுபோய், ஹெலிக்காரன் சுத்த போயிருந்த சமயம், இன்னமும் எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேலே ஊற்றி அணைத்து எங்கள் இடத்தை கும்மிருட்டாக்கினார். அதற்கு பிறகு தான் ஹெலிக்காரன், எங்களை விட்டுவிட்டு வேறு யார் வீட்டு குப்பையையோ தாக்க போய்விட்டான். நாங்கள் நிம்மதியாக அதற்கு பிறகு நித்திரை கொள்ளக்கூடியதாக இருந்தது.

எட்டாம் வகுப்பில் “Life Skills” என்று ஒரு பாடம் இருந்தது. அதில் மரக்கன்று நடுவதற்கு ஆளாளுக்கு 25 பால்மா பாக்குகள் (லக்ஸ்பிரே, நெஸ்பிரே, அங்கர் பைகள்) கொண்டுவரசொல்லிவிட்டார்கள். யார் அதிகம் கொண்டுவருகிறார்களோ அவருக்கு சிறப்பு பரிசு என்றும் அறிவித்துவிட, பொறுக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு வீட்டு குப்பைகள், வீதியில் போகும்போது குவிந்துகிடக்கும் குப்பைகள், கோயிலடி, முனிசிப்பல் ஏரியா, முன் வீடு, பக்கத்து வீடு, மாமி வீடு, தின்னவேலி சந்தை என்று எல்லா இடமும் அலைந்து திரிந்து பொறுக்கி சேர்த்ததில் மொத்தமாக் 127 பைகள் சேர்த்துவிட்டேன். போய் பார்த்த பின்தான் புரிந்தது, வகுப்பில் எல்லோருமே என்னை விட சிறந்த பொறுக்கிகள் என்று. அதுவும் கீர்த்தி முன்னூறு பை சேர்த்து வந்து வகுப்பின் முதல் பொறுக்கியானான்.

எது குப்பை என்பது ஒரு வித சார்ப்புக்கோட்பாடு தான். அப்போது வரும் சிந்தாமணி பேப்பரில் விஞ்ஞான உலகம், பொது அறிவு, விஷயங்களை எல்லாம் கட்டம் கட்டி வெட்டி, ஒரு பைஃலில் சேர்த்து வைத்திருந்தேன். அம்மா குப்பை என்று எறிந்துவிட்டார். ஜேஆரும், ராஜீவ்காந்தியும் கை எழுத்து போடும் படம், இந்தியா டுடேயில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். என்னுடைய கப்பேர்டில் ஒட்டி வைத்திருந்தேன். பின்னர் குப்பையானது. அப்போது எல்லாம் கணக்கு செய்யவென்று பில்கட்டுகளை கடைக்காரரிடம் வாங்கி பயன்படுத்துவோம். அதில் நிறைய கதைகள் ட்ரை பண்ணியிருக்கிறேன். எல்லாமே உல்டா கதைகள். என் இனிய இயந்திரா வாசித்தால், என் வீட்டு ஆட்டுக்குட்டி ரோபோ ஆகும். சங்கர்லால் துப்பறிந்தால்,  நான் உடனே எனது பெயரிலேயே கச்சேரியடியில் நடந்த கொள்ளை சம்பவத்தை துப்பறிய தொடங்குவேன். இப்படி கோழி கிறுக்காய் நிறைய எழுதின விஷயங்கள். அம்மாவுக்கு இந்த எழுத்து பாட்டு என்று டைம் வேஸ்ட் பண்ணினால் பிடிக்காது. பெடியன் கெட்டுப்போயிடுவான். விளைவு எல்லாமே குப்பைக்கூடைக்குள் போனது. கவிதையை கூட யாருக்கும் தெரியாமல் களவாக எழுதிய காலம் அது. இன்றைக்கு “நாளை இன்று நேற்று”என்று என் சந்தோஷத்துக்காக வாசிப்பவர்களை மண்டை கிறுகிறுக்க வைத்தாலும் யாருமே கேள்வி கேட்கமுடியாது. என்னை தவிர வேறு யாரும் இது குப்பை என்று தூக்கி வீசமுடியாது. வாசகர்கள் வீசுவது வேற விஷயம்!இந்த சுதந்திரம், இந்த நொடி … எப்போதும் இருக்கவேண்டுமே.

Kuppai Podubavarkalகுப்பை விஷயத்தில் எங்கள் ஆக்களின் வண்டவாளம் நல்லா வெளியே வரும். பொதுவாக அக்கம் பக்கத்து வளவுகளில் ஆள் இல்லை என்றால் தங்கள் வீட்டு குப்பையை இரவோடு இரவாக மதிலால் எட்டி போட்டுவிடுவார்கள். வாழைக்குலை பழுத்துவிட்டால், அதை சந்தையில் விற்றுவிட்டு, ஓலைகளையும், தண்டுகளையும் கொண்டுவந்து ஒழுங்கையிலோ வீதியிலோ போட்டுவிடுவார்கள். யாழ் இந்து கல்லூரிக்கு பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டுக்கு என்ன ராசியோ, ஊருலகத்தில இருக்கிறவன் எல்லாம், குப்பையை கொண்டுவந்து அந்த வீட்டு மதிலுக்கு முன்னால தான் போடுவான். வீட்டுக்காரர் டென்ஷனாகி, ஒரு நாள் மதிலில கரித்துண்டால் “இங்கே குப்பை போடவேண்டாம்” என்று கொட்டை எழுத்தில் எழுதிவிட்டார். அடுத்தநாள் கலியாணவீட்டு சாப்பாட்டு இலைகளை எவனோ போட்டுவிட்டு போய்விட்டான்.  இவர் டென்ஷனாகி “தயவு செய்து இங்கே குப்பை போடவேண்டாம்” என்று எழுதினார். காலையில் பார்த்தால் யாரோ ஒருவன் கரியில் எழுதியிருந்த எழுத்துக்கு மேலே ஒண்டுக்கு அடித்துவிட்டு போயிருந்தான். சிங்கன் கடுப்பாயிட்டார். “நாய்கள் மட்டுமே இங்கே குப்பை போடும்” என்று எழுதினார். இம்முறை நாய் வேறு அலுவல் பார்த்துவிட்டு போய்விட, தலைவர் தளரவில்லை. நாய்களை அழித்துவிட்டு பேய்கள் என்று மாற்றினார். யாழ்ப்பாணத்தானுக்கு நாயென்ன பேயென்ன. அவன் தன் அலுவலை சரியாகவே பார்த்தான்.

நம்மாள் கடைசில வேறு வழியில்லாம “தயவு செய்து இங்கே உங்கள் குப்பைகளை போடவும்” என்று எழுதினார். “அதென்ன நீ சொல்லி நான் போடுறது” என்றோ என்னவோ, அடுத்தநாள் எவனுமே அங்கே குப்பை போடவில்லை.

யாழ்ப்பாணத்தான் யாழ்ப்பாணத்தான் தான்.


வெளிநாட்டு குப்பை!

bangladeshi-sgசுத்தமான தேசத்துக்கு சிங்கப்பூரை எல்லோரும் சொல்லுவார்கள். அந்த நாட்டின் சுத்தத்துக்கு மூன்று முக்கிய காரணங்கள். அங்கே கையில் குப்பையுடன் எங்கே போடுவது என்று அலையதேவையில்லை. பார்க்குமிடமெல்லாம் குப்பைத்தொட்டி இருக்கும். அப்படியும் தவறி கீழே போட்டுவிட்டாலும், அது நிலத்தில் போய் விழுவதற்கு முன்னரே காட்ச் பிடிக்க ஒரு பெங்காலிக்காரன் இருப்பான். சுத்திகரிப்பு பணியாளர்கள் என்று சாரை சாரையாக பங்களாதேஷில் இருந்து, நிறைய கனவுகளுடனும், காத்திருக்கும் கண்ணீர்களுடனும் வருகின்ற பங்களாதேஷ்காரர்களில் அடிமை வாழ்க்கை சிங்கப்பூரின் சுத்தத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது. அவர்கள் ஏஜெண்டுக்கு கட்டவேண்டிய காசை சேர்க்கவே இரண்டுவருடம் குப்பை பொறுக்கவேண்டும். அதற்கு பிறகு தான் வீட்டுக்கு கலர் டிவியோ, தங்கச்சிக்கு நோக்கியாவோ, மனைவிக்கு பெர்ஃபியூமோ வாங்கி அனுப்பலாம். வாரத்தில் ஆறு நாளும் வேலை. ஏழாம் நாள், ஞாயிறு அன்று செரங்கூன் போய், டெலிபோன் கார்ட் வாங்கி, வீட்டுப்பிரச்சனையை ரோட்டு பப்ளிக் போனில் வைத்து தீர்த்துவிட்டு, மசூதிப்பக்கம் இருக்கும் பங்களா கடையில் ஒரு வெட்டு வெட்டிவிட்டு எம்ஆர்டி பிடித்துப்போய் டோமெட்ரியில் படுத்தால், காலை ஐந்து மணிக்கெல்லாம் அள்ளிக்கொண்டு போக வாகனம் வந்துவிடும். மீண்டும் குப்பை பொறுக்க.

Singaporeசிங்கப்பூர் சுத்தமாக இருக்க மூன்றாவது காரணம், பயம். றோட்டில் போட்டு பொலிஸ் பிடித்தால் இருநூறு டொலர் தண்டப்பணம் கட்டவேண்டும் என்று மூலைக்கு மூலை எழுதிப்போட்டிருப்பார்கள். தண்டிக்கிறார்களோ இல்லையோ, அந்தப்பயம் தலைமுறை தலைமுறையாக பரவிவிட்டது. அதனால் ஏன் வம்பு என்று கேள்வியே கேட்காத ஒரு தலைமுறை அந்த நாட்டில்.

அவுஸ்திரேலியா அந்த விஷயத்தில் வித்தியாசம். இங்கே பயத்தினால் எதையுமே சாதிக்கமுடியாது. காரணம் பிள்ளைகளை பயம் காட்டாமல் சுதந்திரமாக வளர்ப்பது தான் இந்த நாட்டின் ஆதாரமான கொள்கை. குழந்தை மரத்தில் ஏறும்போது வேடிக்கை பார்த்து, விழும்போது போய் பிடிக்கும் கொள்கை. அந்தப்பிள்ளைக்கு “குப்பை போட்டால் பைஃன் அடிப்பேன்” என்று சொன்னால் நமக்கு நடுவிரல் காட்டும்.! ஒரே வழி, குப்பை ஏன் போடக்கூடாது என்று சொல்லிக்கொடுப்பது தான். அது ஓரளவுக்கு சாத்தியமாகி இருக்கிறது. இங்கே படித்த, பலகாலம் வாழ்கின்ற மக்களுக்கு அந்த பழக்கவழக்கங்கள் இயல்பாகவே வருகிறது. அக்காவின் மகள், நான் கையில் குப்பை வைத்திருந்தால், “மாமா போய் ரபிஷில போடுங்க” என்று தத்தித்தத்தி சொல்லுவாள். பொதுவாக வீதிகளிலோ பொது இடங்களிலோ, ஏன் பிக்னிக் ஏரியாக்களில் கூட இந்த மனப்பான்மை New 3 bins (2)இருக்கும். பாபிகியூ போட்டால், அடுப்பை அழகாக சுத்தப்படுத்தி, அடுத்தவர் பயன்படுத்தும் வண்ணம் தயார்படுத்திவிட்டே போவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் குப்பைக்கு ஒன்று, ரீசைக்கிளுக்கு ஒன்று, புல்லு பூண்டுகளுக்கு ஒன்று என்று மூன்று பின்கள் இருக்கின்றன. தவணை முறையில் வாரம்தோறும் எடுத்துச்செல்ல வாகனம் வரும். இதெல்லாத்துக்கும் சேர்த்து கவுன்சில் வரிப்பணம் என்று வருடம் தோறும் கட்டவேண்டும். சில இடங்களில் குப்பைகளின் அளவுக்கேற்ற வரிப்பணம் என்ற நடைமுறையும் இருக்கிறது.

ஒரு பிரதேசம் சுத்தமாக இருக்க,  ஆங்காங்கே குப்பை தொட்டில்கள்,  சுத்திகரிப்பு பணியாளர்கள், மக்களின் கலாச்சாரம் மூன்றுமே தேவையாக இருக்கிறது. இலங்கையில் நான் இருக்கும் வரையில் இந்த மூன்றுமே பூச்சியம். குப்பைத்தொட்டில்கள் எங்கேயாவது அகப்பட்டாலும் அது நிரம்பி வழிந்து, எட்டிப்போடும்போது ஏதாவது புழு எழுந்து ஹாய் மச்சி என்று சொல்லும். நாங்களும் பதிலுக்கு வாந்தி எடுத்துவிட்டு வரவேண்டும். இது எல்லாவற்றையும் விட மக்களின் மனநிலை. இந்த உலகத்தில், தன் வீடு தவிர மிகுதி எல்லாமே குப்பைத்தொட்டி தானே என்ற மனநிலை. பலகாலமாய் உறுத்தும் கேள்வி இது.

அதெப்படி எங்களுக்கு மாத்திரம் வீதியை இறங்கியவுடன் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை எச்சில் துப்பவேண்டும் போல இருக்கிறது?


Q & A

விகாஸ் சுவார்ப் எழுதிய இந்த நாவலை தான் சிலம்டோக் மில்லியனார் என்று குதறினார்கள். ராம் முஹமட் தோமஸ் என்ற தராவியில் வசிக்கும் இளைஞன் Who will win  a Billion? என்ற நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற நிகழ்ச்சியில் பன்னிரண்டு கேள்விகளுக்கும் எப்படி சரியாக பதில்சொல்லி பில்லியன் ரூபாய்கள் வெல்கிறான்? என்கின்ற கதை. படத்தில் வந்த கதை தான். ஆனால் கேள்விகளும் அதற்கு பின்னால் இருக்கும் சம்பவங்களும் வித்தியாசம்.

200px-Q_and_A_-_black_swan_editionசம்பவங்கள் இந்தியா முழுதும் பயணிக்கும். ராம் எப்படி தோமஸ் ஆகி மொகமட் ஆகிறான் என்று விளக்கும். திமோதி என்கின்ற சேவை மனப்பாங்கு நிறைந்த பாதிரியார், அனாதை ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் போது,  ராம் தோமஸ் ஆகிறான். கிறிஸ்தவ நிறுவனத்துக்குள் வெள்ளைக்கார பாதிரியார்கள் சிலரில் வண்டவாளங்கள், அவர்கள் செக்ஸ் படம் பார்ப்பது எல்லாம் கதையில் வரும். பிரேம்குமார் என்கின்ற பாலிவுட் ஹீரோ எப்படி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்கிறான் என்று இன்னொரு சம்பவம். அவுஸ்திரேலியாவை சேர்ந்த இராஜதந்திரியின் வீட்டில் இவன் வேலை செய்கிறான். அங்கே அவுஸ்திரேலிய உச்சரிப்புகளை பழகுகிறான் (No worries, Maite, fair enough). அந்த இராஜதந்திரி ஒரு உளவாளி என்று தெரியவருகிறது.  உளவாளியை போட்டுக்கொடுத்துவிட்டு தப்புவது. பின்னர் ஒரு நடிகையின் வீட்டில் வேலை செய்வது. தாஜ்மகாலில் டூரிஸ்ட் கைட் வேலை. அங்கே தான் நீதாவை சந்திக்கிறான். அவள் ஒரு விலை மாது. காதலிக்கிறான். கதை வெகு இயல்பாக நகரும். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அந்த சம்பவம் சார்ந்த கேள்வியும் அதற்கு அவன் சரியாக பதிலளிப்பதாயும் இருக்கும்.

பதினொறாவது கேள்வி ஷேக்ஸ்பியரின் எந்த படைப்பில் கொஸ்டார்ட் என்ற பாத்திரம் வருகிறது? Ask the friend மூலம் தான் உதவிய டீச்சரை அழைத்து அவரிடம் சரியான பதிலை கேட்கிறான். கடைசிக்கேள்வி பீத்தோவன் சம்பந்தமானது. அந்த கேள்விக்கு இவனுக்கு சுத்தமாக பதில் தெரியாது. கையில் இருக்கும் நாணயத்தை சுண்டி, தலை விழுந்தால் ஒப்ஷன் A என்று தீர்மானிக்கிறான். தலை விழுகிறது. வெற்றி பெறுகிறான்.

படத்தில் நடந்தது போலவே அவனை போலீசில் மாட்டுகிறார்கள். அங்கே ஒரு பெண் வக்கீல் இவனுக்கு உதவுகிறாள். இறுதியில் இவன் நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட, வெற்றிப்பணம் கைக்கு வர, டிவி நிறுவனம் திவாலாகிறது. கதை முடிவில் அவனுடைய அதிர்ஷ்ட நாணயத்தை அந்த வக்கீல் வாங்கிப்பார்க்கிறாள். அந்த நாணயத்தின் இரண்டு பக்கமுமே தலை தான். “Its my lucky coin, but luck has nothing to do with it” என்று சொல்லி சிரிக்கிறான்!

திரைப்படத்தில் நிறையவிஷயங்களை வெட்டி, இந்தியாவை எவ்வளவுக்கு எவ்வளவு குப்பை நாடாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருப்பார்கள். நாவல் அப்படி இல்லை. ஒரு சராசரி இந்தியாவை அதன் நல்லது கெட்டதுகளுடன் எழுதியிருப்பார் விகாஸ். நாவலில் நாடகத்தன்மையோ, நீதாவும் ஜமாலும் கிஸ் அடிப்பதோ எதுவுமே இல்லை. கக்கூஸ் குழிக்குள் விழுந்து எழுந்து ஓடிப்போய் அமிதாப்பிடம் ஓட்டோகிராப் வாங்கும் தராவி குழந்தையும் இல்லை. சொல்லப்போனால் அவன் இறுதியில் தான் தராவியில் வசிக்கிறான். ஆரம்பம் டெல்லியில் தான்.

இந்தப்புத்தகம், திரைப்படம் வெளியாகி தலைவர் இசை என்று தெரிந்தவுடம் ஓடிப்போய் வாங்கி வாசித்த புத்தகம். முடித்த சூட்டோடு படத்தையும் பார்த்து சூடுபட்டுக்கொண்டது தான் மிச்சம். Five Point Someone க்கும் இது தான் நிகழ்ந்தது. ஆனந்த தாண்டவம், கரையெல்லாம் செண்பகப்பூ எல்லாமே சேம் ப்ளட். இதிலே The Namesake ஓரளவுக்கு நாவலுக்கு நேர்மை சேர்த்த திரைப்படம்.

வாசிக்கும்போது நாமே டீஆர் போல கலை, திரைக்கதை, நடிப்பு, இயக்கம் எல்லாம் சிருஷ்டித்து வாசிப்பதால், நாவல் தரும் அனுபவத்தை எந்த திரைப்படமும் நெருங்ககூட முடியாது என்பது மீண்டும் இதில் நிரூபணமானது.


குப்பை கிளறி!

dumpster-diveகுப்பைகளை கிளறி அதற்குள் இருந்து பயனுள்ள பொருட்களை எடுப்பது. பாவிப்பது. விற்பது என்பது தனியான ஒரு தொழில். Profession. ஆங்கிலத்தில் இதை Dumpster Diving என்று சொல்லுவார்கள். ஒரு ஆங்கில திரைப்படமே வெளிவந்திருக்கிறது. தளபாடங்கள் ஏதுமில்லாத ஒரு வெறுமையான வீட்டுக்குள், எதுவுமே கொண்டுவராமல் உடுத்த உடையுடன் குடியேறிய ஒரு ஜோடி, கொஞ்சம் கொஞ்சமாக சல்லிக்காசு செலவழிக்காமல் குப்பைகளை கிளறி, அவரவர் வேண்டாம் என்று ஒதுக்கிய பொருட்களை வைத்தே அந்த வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டுநடத்துகிறார்கள். Dumpster Diving என்று சும்மா கூகிளில் தேடிப்பாருங்கள். எப்படி குப்பை கிளறுவது, அதில் இருக்கும் நெறிகள், வழிமுறைகள், வாராந்திர கூட்டங்கள், Facebook page என்று அந்த உலகம் தனியாக கலக்கிக்கொண்டிருக்கிறது. இங்கே பழுதான, தேவையில்லை, உபயோகப்படாது என்று நினைக்கும் பொருட்களை வீடுகளில் பரணில் மேல் தலைமுறை தலைமுறையாக போட்டு வைத்திருக்கமாட்டார்கள். எடுத்து வீட்டுக்கு வெளியே வைத்துவிடுவார்கள். அது வேறு பலருக்கு மிகவும் தேவையானதாக இருக்கலாம். டிவி, பிரிட்ஜ், கட்டில் மெத்தை முதல்கொண்டு கொம்பியூட்டர் வரை இப்படி சேகரிக்கலாம். நான் கூட, கராஜுக்கு தேவை என்று இரண்டு கதிரைகள், ஒரு கொம்பியூட்டர் டேபிள் அப்படி எடுத்துவைத்திருக்கிறேன்!

julian_assange_2010-front1விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் ஆசானே. அமெரிக்காவுக்கு கண்ணிலே எண்ணைவிட்டு ஆட்டுபவர். எல்லோருக்குமே தெரிந்ததே. தெரியாத விஷயங்கள் பல இருக்கின்றன. இவர் ஒரு மண்டைக்காய். சின்ன வயதிலேயே(Underground என்ற ஒரு ஆவணப்படம் இருக்கிறது. இயலுமென்றால் பாருங்கள்) கொம்பியூட்டர், கொமுனிகேஷன் சார்ந்த ஹாக்கிங்கில் ஈடுபாடு கொண்டவர். வளைகுடா யுத்தம் நடைபெற்ற காலம். இவருடைய தாய் போருக்கு எதிராக குரல்கொடுக்கும் இயக்கத்தில் இருந்தவர். ஆர்ப்பாட்டம் எல்லாம் போய் செய்வார்கள். ஐந்தாறு பேரு தான் ஆர்ப்பார்ட்டத்துக்கு போவார்கள். அப்போதே தாயிடம் இது வேலைக்காகாது என்று சொல்லி, தனது திறமையால் அமெரிக்க பாதுகாப்புத்துறை கணணி கட்டமைப்பை ஊடறுத்து அங்கிருந்த பல முக்கிய தடயங்களை வெளிக்கொண்டுவந்தார். குறிப்பாக, பாதுகாப்பு வலயம் ஒன்றில் இருந்த மக்களை, அங்கே மக்கள் இருந்தது தெரிந்தும் குண்டு போட்டு தாக்க சொன்னார்கள் என்ற சம்பவத்துக்கான ஆதாரத்தை, படங்கள் மூலம் வெளிக்கொண்டு பலத்த சர்ச்சையை உண்டு பண்ணினார். அப்போதே ஆசானேக்கு ஒரு கொள்கை இருந்திருக்கிறது.

“தகவல்களை திருடி உலகுக்கு வெளிப்படுத்த வேண்டுமே ஒழிய, தகவல்களை மாற்றுவதோ, அதை விற்று பணம் சம்பாதிக்கவோ கூடாது.”

சின்னவயதில் இருந்த இந்த கொள்கை விக்கிலீக்ஸ் வரைக்கும் நீடித்தது. விக்கிலீக்சை கொண்டுநடத்த தான் அவர் பணம் கேட்டாரே ஒழிய, அந்த ரகசியங்களை வேறு ஒரு நாட்டுக்கு விற்று பணம் பார்க்கும் வேலையை அவர் செய்யவில்லை. அந்த வகையில் அவர் ஒருவித எதிக்கல் ஹக்கர் (Ethical Hacker).

udnerground-660x400இவருக்கும் குப்பைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. சின்ன வயதில் அவுஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிலையத்தின் மொடம்களை தொடர்பு கொண்டு அதன்மூலம் இலவசமாக வெளிநாட்டு எக்ஸ்சேஞ்களை இணைத்து, அமெரிக்க பாதுகாப்பு தளத்தை ஊடறுக்க அவருக்கு உள்ளூர் மொடம்களின் ரெஜிஸ்டர் லிஸ்ட், பாஸ்வேர்ட் எல்லாம் தேவைப்பட்டது. அதற்கு அந்த நிறுவனத்துக்கு பின்னாலே கிடந்த குப்பைக்கூடைக்குள் போய் அவ்வப்போது தேடிப்பார்க்க ஒருநாள் அது கிடைத்தேவிட்டது. அதை வைத்து நெட்வொர்க் சிஸ்டத்துக்குள் புகுந்து, அமெரிக்க நெட்வேர்க் வரைக்கும் ஊடுருவினார் ஆசானே.

ஆசானே இப்படி குப்பைத்தொட்டியில் போய் பாஸ்வோர்ட் மற்றும் தகவல்களை தேடியதை, Computer Security என்ற பாடத்தில் Dumster Diving பற்றிய செக்ஷனில் படிப்பித்தார்கள். எதை குப்பையில் போடுகிறோம் என்பதில் அவதானமாக இருக்கவேண்டும்.  முக்கியமான டோக்கியூமண்டுகள், படங்கள், பழுதடைந்த ஹார்ட்டிஸ்க்குகள், சிடிகள் இவற்றை குப்பையில் போடமுதல் நன்றாக நிர்மூலமாக்கிவிட்டே போடவேண்டும்.

1332247490565_6443162

இந்த சுத்திகரிப்பு பணி ”Facebook இலும் முக்கியம். மூன்று வருடங்களுக்கு முதல் ஏதோ ஒரு கெத்தில் “ஐ லவ் யூ நமிதா” என்று போட்டவர்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேடஸ் மாறியதும் அவசர அவசரமாக அவற்றை அழித்த சம்பவங்கள் பார்த்திருக்கிறேன். On a serious not, தனி நபர் கருத்து என்பது அடிக்கடி மாறக்கூடியது. இன்றைக்கு கொம்யூனிஸ்டாக இருப்பவன் நாளைக்கு முதலாளித்துவத்துக்கு மாறலாம். கடவுள் இல்லை என்பவன், இருக்கலாம் என்று மாறி இரண்டு வருடங்களில் மாரி ஆத்தாவுக்கு கூழ் ஊத்தலாம். இந்த மாற்றங்களை அவரவர் டைம் லைனில் கூர்ந்து கவனித்தால் அவதானிக்கலாம். இது இயல்பு தான். இப்படியே விட்டுவிடுவதில் எந்த பாதகமும் இல்லை தான். ஆனால் எங்கள் மத்தியில் ஒரு கூட்டம் எப்போதுமே இருக்கும். “நீ அன்னிக்கு அப்பிடி சொன்னாய், இன்னிக்கு இப்பிடி சொல்ற, ஏன் மாத்திற? ஏமாத்திற!” என்றெல்லாம் குறை கண்டுபிடிக்கும். இவர்களை ஒதுக்கவும் முடியாது. Whistle blowers. நல்லதை சொல்லுபவனை விட, அவனில் குறை காணுபவனை தான் கூட்டம் அதிகம் லைக் பண்ணும். இந்த சிக்கல்களை தீர்க்கத்தான் என் Facebook timeline ஐ நான் அடிக்கடி கிளீன் பண்ணிவிடுவேன். தேவையில்லாத ஸ்டேடஸ்கள், அவ்வப்போது போட்ட மொக்கைகள், அர்த்தமில்லாமல் போன விஷயங்கள், எனக்கும் எவருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை என்று தெரியும் விஷயங்கள், எல்லாமே ஒரே டிலீட் தான். நீண்ட காலத்தில் தேவையற்ற மனச்சோர்வை தடுக்க இந்த கிளீன் அப் ப்ரோசஸ் உதவி செய்யும்.

படலை கூட விதிவிலக்கில்லை. ஆரம்பத்தில் நிறைய Gadgets போட்டிருந்தேன். இப்போது side bar கூட தேவையில்லை என்று தூக்கிவிட்டேன். “மீனுக்கு உணவு கொடுங்கள்”, “பார்த்தியா எனக்கு இத்தனை ஹிட்டு”, “லண்டனில் இருந்து வரும் வாசகரே வணக்கம்”, “எனக்கு பிடித்த படம் உதிரிப்பூக்கள், God Father” வகை Gadgets படலையில் கிடைக்காது.  எது குப்பை என்பது நாளுக்கு நாள் புரிய ஆரம்பிக்கிறது. “உஷ் இது கடவுள்கள் துயிலும் தேசம்” கதையில் கூட ஏகப்பட்ட தவறுகள், தேவையில்லாத பாசாங்குகள். திருத்தவேண்டும். அல்லது தூக்க வேண்டும். ஒரு நாள் மொத்த படலையே குப்பை என்று அறியும்போது தளமே இல்லாமல் போகும் சாத்தியமும் இருக்கிறது!


குப்பை மேட்டில் ரோஜா செடி பூப்பதில்லையா?

boys1-1பாய்ஸ், வெளிவந்த சமயம் பலத்த சர்ச்சைகளை உருவாக்கிய திரைப்படம். குறிஞ்சி முதல் ஷோ போய்ப்பார்த்துவிட்டு வந்து “என்னடா இவ்வளவு வல்கரா எடுத்திருக்கிறாங்கள்” என்று குறைப்பட்டான். “வேஸ்ட்டு படம் பார்க்காதீங்கடா” என்றான். “இல்லடா நாளைக்கு சினிசிட்டிக்கு போகப்போகிறோம். பாட்டுக்காகவே பார்க்கலாம்” என்று நானும் கஜனும் சொல்ல. “எல்லோரும் போனா, ஒகே நானும் வாறன், ஒரு கொம்பனிக்கு” என்று சொல்லி அடுத்தநாள் காலை எட்டுமணிக்கே வீட்டில் அவன் ஆஜர். மூன்று மணி நேர படம் ஆவென்று பார்த்துவிட்டு முடிந்து வெளியே வரும்போது மீண்டும் சொன்னான்

“என்னடா இவ்வளவு வல்கரா எடுத்திருக்கிறாங்கள்?”.

boysஇது அமெரிக்கன் பை, போர்கீஸ் போன்ற ஸ்டைலில் வந்த படம் இது. அதை ஷங்கர் எடுத்ததால் சரோஜாதேவி படம் பார்த்தவன் எல்லாம் தன்னை உத்தமனாக காட்டவேண்டிய நிலை வந்தது. பாய்ஸ் இளைஞர்களுக்கான படம். ஒரு என்டர்டெய்னர், பார்த்தமா, விசில் அடிச்சமா படம் முடிய ரோலக்சில் மட்டன் புரியாணி அடிச்சமா என்ற ரீதியில் கடந்துவிடவேண்டிய படம். இது தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கும் என்று கூச்சல் போட்டார்கள். சங்கர் நினைத்தால் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கலாம் என்றால், அவ்வளவு வீக்கான கலாச்சாரமா எங்களது என்ற சந்தேகம் வருகிறது. அதை விட அமெரிக்க கலாச்சாரம் ஒன்றும் அத்தனை கெட்டதும் இல்லை. ஐன்ஸ்டீன் Federal culture பற்றி எங்கேயோ குறிப்பிட்டதாக ஞாபகம் வருகிறது. கெடுவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் கெடாமல் எந்த ஒரு இனம் சமாளிக்கிறதோ அந்த இனத்தின் கலாச்சாரமே நிஜமான கலாச்சாரம். துப்பாக்கி முனையிலும், கத்தி முனையும், இழுத்துப்போர்த்தியும், கூழ் முட்டை எறிந்தும் ஓரளவுக்கு மேலே எந்த கலாச்சாரத்தையும் காப்பாற்றமுடியாது. அப்படிப்பட்ட கலாச்சாரம் மனித இனத்துக்கு தேவையும் கிடையாது. Without a composer, what can an award do? என்று இளையராஜா சொன்னது போல!

பாய்ஸின் மிகப்பெரிய பலம் பாடல்கள்.  ஒரே பலம் என்றும் கூட சொல்லலாம். “யாரைக்கேட்டு எந்தன் நெஞ்சில்”  பாடல் எல்லாம் ரகுமான் என்ற எட்டாவது அதிசயத்தால் மாத்திரமே முடியக்கூடிய பாடல். படத்தில் பிட்டாக வந்த “ப்ளீஸ் சேர்”, ஐயப்பா, பாடல்கள் கூட கிளாசிக்காக இருக்கும். எதற்காக அல்பத்தில் வெளியிடவில்லையோ தெரியாது.

இந்த பாட்டும் ரகுமானின் ஒரு மாஸ்டர் பீஸ். சரணம் எல்லாம் எல்லாம் சான்ஸே இல்லை. வரிகளும் அப்படியே. வித்தியாசமான ஐடியா. அதை அப்படியே இயல்பாக எடுக்காமல் தேவையில்லாமல் விட்டலாச்சார்யார் வேலை செய்வது தான் ஷங்கரின் பிரதான பலவீனம். இதே ஐடியாவை “காதலிக்கும் பெண்ணின் கைகள்” பாட்டிலும் பயன்படுத்தியிருப்பார். ஆனால் தலைவர் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் வண்ணம் அந்த பாட்டில் திடீரென்று ஒரு தவில் தாளத்தை நுழைப்பாரே. ஐயோடா.

 

குப்பைக்கவிதை!

நீயும் குப்பை, நானும் குப்பை
சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை
நிலவின் ஒளியில் நீயும் நெளித்து
நெடித்து வளைத்து நிற்க கண்டு
dhritarashtra_and_gandhari_by_vachalenxeon-d5pqsefரெண்டும் ஒண்டு எண்டு நினைச்சு
மதியை இழந்து தளர்ந்த நேரம்
காமம் கடுகென உடலது பரவிட
கலப்பை உழுது கண்ட கமத்தில
விளைஞ்சது எதுவோ ஆறடி பயறோ?
பூனைக்கு ஏதும் பிறந்திடும் புலியோ?
அதுவும் வளர்ந்து ஆனது குப்பை.
குப்பைக்குள் குண்டு மணிவரு மென்றுநம்பி
இது தான் கடைசின்னு பலமுறை கெஞ்சி
இனியும் ஏலாது எண்டு காந்தாரியும் சொல்லி
ஓய்ஞ்சு ஒடிஞ்சு நிமிர்ந்து பார்த்தா
கண்ணுக்கு முன்னாலே நிக்குது நூறு
நூறும் சேர்ந்து நாறும் வாயால்
நம்மைப்பார்த்து உறைக்கச்சொன்னது
நீரும் குப்பை, நாமும் குப்பை
நாம சேர்ந்தா நாடே குப்பை!

 

&&&&&&&&&&&&&&


Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>