எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே;
நிற்க.
அப்படியென்ன எங்கள் ஒழுங்கைக்கு ஒரு பெரிய வரலாறு என்ற கேள்வி இங்கே எழலாம். உண்மைதான். உலக வரைபடத்தில் எங்கள் ஒழுங்கை ஒன்றும் அவ்வளவு முக்கியமானது என்று சொல்வதற்கில்லை. கனக்க வேண்டாம், யாழ்ப்பாணத்தில்கூட அது அவ்வளவு பிரசித்தம் இல்லை. அவ்வளவு போவான் ஏன்? இராமநாதன் வீதியில் வந்து நின்று எங்கள் ஒழுங்கையை விசாரித்தாற்கூட ஆள்கள் முழுசுவார்கள். பாவம், எங்கள் ஒழுங்கைக்கு என்று தனியாக ஒரு பெயர்கூட இல்லை. பிரதான வீதியின் பெயரையே தன்னுடைய பெயராகவும் வைத்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஒழுங்கை. யாராவது ஒரு பாங்கரோ, டாக்குத்தரோ, குறைந்தது ஒரு பரியாரியோ அங்கு வாழ்ந்திருந்தாலும் அவர்கள் பெயரால் அந்த ஒழுங்கை பிரபலமடைந்திருகும். அதுவும் கிடையாது. அவசரத்துக்கு அவனவன் மூத்திரம் பெய்யிறதுக்கும் காதலிக்கிறதுக்கும் ஒதுங்குவதோடு சரி. அவ்வளவுதான். வாழ்க்கையில் அந்த ஒழுங்கை ஆன தார் கண்டிராது. ஒரு கார் நுழைய இயலாது. இரண்டு சைக்கிள் நின்றால் உள்ளே ஓட்டோ வர முடியாது. அப்படியே வந்தாலும் திருப்பமுடியாது. யாரோ ஒரு பூர்வீக யாழ்ப்பாணத்தான் தன் தோட்டக்காணியைப் பிரித்து விற்பதற்காக மனமில்லாமல் போட்டுவைத்த ஒரு குச்சு ஒழுங்கை. ஆனாலும் என்ன, எங்களைப் பொறுத்தவரையில் அது நாம் வாழ்ந்த ஒழுங்கை அல்லவா. அதனால்தான் சொல்கிறேன். சின்னன் என்றாலும் சிறப்புகள் ஏதுமில்லை என்றாலும்கூட எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் ஒழுங்கையின் வரலாறு என்பது மிக மு க்கியம்.
இப்போது மீளவும் கதையை ஆரம்பிக்கிறேன்.
எங்கள் ஒழுங்கையின் வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் என்று சொன்னால், அது வெள்ளையன் அங்கிளின் குடும்பம் லண்டனிலிருந்து விடுமுறையில் வந்துநின்ற அந்தக் கொஞ்சக்காலம்தான்.