Quantcast
Channel: படலை
Viewing all articles
Browse latest Browse all 501

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

$
0
0

 

kampavaruthy_jeyaraj

திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013
அவுஸ்திரேலியா.

அன்புத்  தம்பிக்கு,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நலமே நாடு சேர்ந்தோம்.
மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.
அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.
மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.
கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர்.
நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு,
நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது.
ஆற்றல் கண்டு அதிசயித்தேன்.
பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள்.
எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது.
சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும்.
கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு.
விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள்,
மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை.
நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம்.
இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள்.
வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும்.
மற்றை இனத்தார் தமது தகுதிகளை,
அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர்.
ஈழத் தமிழினத்தார் உலகெலாம் பரவியும்,
தம் ஆற்றல்களை, தமிழுலகிற்குத்தானும் காட்டத் தவறி நிற்கின்றனர்.
ஈழத் தமிழர்தம் ஆற்றல்கள் உலகலாவி விரிய,
உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் வழி செய்ய வேண்டும்.

* * *
ஆற்றல்மிகுந்த உங்களைப்போன்ற இளைஞர்கள்,
விருட்சமாய் விரிந்து நின்று வித்தாய் எமை இனங்காட்ட,
உளம் விதிர்விதிர்க்கின்றது.
இதுநாள் வரையிலான வாழ்வின் பயன் கண்டு மகிழ்கிறேன்.
புத்தியுள்ள பிள்ளையொன்று “இது இவன் தந்தது” என்று உரைக்கும்போது,
கற்றார் நெஞ்சு களிக்காமல் விடுமா?
நான் துரோணரா? தெரியவில்லை. நீங்கள் ஏகலைவன் என்பதில் ஐயமில்லை.
எனது முயற்சி, தொண்டு, ஆற்றல் அனைத்தும்,
எம் மண்ணில் விழலுக்கிறைத்த நீராயிற்றோ? என ஏங்கி நின்றேன்.
எங்கோ இருந்து இல்லையென்கிறீர்கள்!
மனம் நிம்மதியுறுகிறது.
நீள நினைந்திருப்பேன்!

* * *
உங்கள் கொல்லைப்புறத்து காதலியானதில்,
கொள்ளை மகிழ்ச்சி!
நம் மண்ணின் அறிஞர்கள், விமர்சகர்கள் அனைவராலும்
நிராகரிக்கப்பட்டவன் நான்.
என்னை எனக்கு தெரியும் என்பதால்,
அதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.
பட்டங்களால் மட்டுமே தம்மை அறிஞர்களாய் உரைத்து நின்ற,
அவர்கள் பற்றி நான் எப்போதும் அக்கறைப்பட்டதில்லை.
இன்று அறிவின் சுயவீரியத்தோடு ஓர் இளைஞன்,
என்னைக் காதலியாய் உரைக்கையில் கனிந்து கரைகிறேன்.
நன்றி!
ஹீரோவும் குட்டியனும் இப்போது எங்கே?

* * *
மாறுபாடு அறிவின் அடையாளம்.
மாறுபடும் இடங்களை மனம்திறந்து பேசுவோம்.
கம்பனைக் கடப்பது கடினம்.
நீங்கள் சொன்னவர்களை எல்லாம் வாசித்திருக்கிறேன்.
அவர்களெல்லாம் கம்பன்முன் புள்ளிகளாய்ப் போவார்கள்.
அறிவு வாசிப்பிலில்லை, யோசிப்பிலிருக்கிறது.
சிந்திக்கச் சிந்திக்க கம்பன் தொடுவானமாய் விரிவான்.
இஃது கம்பன்மேல் காதலால் உரைக்கும் கருத்தன்று.
உள்நுழைந்தால்  உண்மை உணர்வீர்கள்.

* * *
கவிதைத்திறனை இன்னும் வளர்க்க வேண்டும்.
எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றைப்பற்றி,
எவரும் சிந்திக்காதவகையில் சிந்திக்கப்பழக,
கவித்துவம் தானே வளரும்.
11171_10151967347455791_1285103450_nபின்னர், சொற்களில் அவற்றை ஏற்றலாம்.
முயன்று பார்ப்போமா?

பொருள் – சீப்பு.
பற்கள் இருந்தும் சிரிக்கத்தெரியாத ஜீவன்.
மற்றவர்களை ஒழுங்குபடுத்த,
தான் ஒழுங்காதல் வேண்டுமென்பதை,
உலகுக்கு உரைத்துநிற்கும் உயர்ந்த பிறவி.


இன்னும் சில முயலுங்களேன்.
பத்துக் கற்பனைகள் (கட்டளைகளை அல்ல),
பார்க்க விரும்புகிறேன்.
கவியரங்கில் கலந்த அனைவரும் முயலலாம்.

* * *
தொடர்வோம்.
”இன்பமே ஒருநாளும் துன்பமில்லை”

அன்பன்
இ.ஜெயராஜ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அகில இலங்கை கம்பன் கழக தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா ஊடாக கம்பவாரிதி திரு இ.ஜெயராஜ் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த மடல்.

வேறென்ன எழுத்தாளனுக்கு வேண்டும்?

தொடர்பான பதிவுகள்
கம்பவாரிதி ஜெயராஜ்
பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு
எப்பவோ முடிந்த காரியம்!
அசோகவனத்தில் கண்ணகி
காடு திறந்து கிடக்கிறது


Viewing all articles
Browse latest Browse all 501

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>