ஆதேஷ் நூறு முத்தங்கள் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் தகப்பன் கீச்சங்காட்டிக்கொண்டே இருப்பார். இடுப்பு கழுத்து என்று கையும் முகவாயும் ஊரும். நாக்கு புரளும். பாவம் மூன்றுவயது ஆதேஷ். கூச்சம் தாங்காமல் அலறுவான்.
“அப்பா விடுங்கப்பா .. கூச்சமா இருக்கு .. என்னால ஏலாது”.
கீச்சிட்டு கத்துவான்.
“ம்ஹூம் .. நீ எனக்கு நூறு கிஸ் தந்தா தான் உன்னை விடுவேன்.”
“தாறன் .. ஹா ஹா .. அம்மா .. விடுங்கப்பா .. ஹா ஹா ..நூறு கிஸ் தாறன்”
தகப்பன் இப்போது பிடியை தளர்த்த ஆதேஷ் அவருக்கு முகத்தில் முத்தம் கொடுக்க தொடங்குகிறான்.
இச் .. இச் .. இச் .. இச் ….
******************************
ஜனவரி எட்டு 2009. கொழும்பின் புறநகரான நுகேகொட. வழமை போல ஆறுமணிக்கே எழுந்து குளித்து, அயர்ன், பண்ணி வெளிக்கிட்டு கீழே சாப்பாட்டு மேசைக்கு வரும்போது, அவருடைய பதினேழு வயது மகள் அகிம்ஸாவும் இணைகிறாள். ரேடியோவில் பிங்க் ப்லோயிட்டின் Great Gig In The Sky பாடல்.
And I am not frightened of dying, any time will do, I don't mind.
Why should I be frightened of dying?
சாவுக்கு நான் ஏன் பயப்பிடோணும்?
எந்த நேரமும் அது வரும்.
எப்போதும் வரும்.
அப்பாவும் மகளும் பாண், சீனி சம்பல் பட்டர் என்று சாப்பிடுகிறார்கள். பேச்சு அமெரிக்க பிரைமரி தேர்தல்களில் ஒபாமாவின் வெற்றி பற்றி போகிறது. ஜெனிபர் அனிஸ்டன், ஆர்ணல்ட் ஸ்வாஸ்னேக்கர், மெல்பேர்னில் இருக்கும் அம்மா, அண்ணன்மார் என்று விஷயங்கள் பல இடங்களுக்கு தாவுகிறது. காலை உணவு முடிய அகிம்ஸாவிடம் செல்ல முத்தம் ஒன்றை வாங்கியபடி, அவர் தன்னுடைய டொயட்டோ கொரல்லா காரில் புறப்படுகிறார்.
“கவனமா போயிட்டு வாங்கப்பா”
”கடவுள் இருக்கிறார் .. எனக்கு ஒண்டுமே ஆகாது”
கார் வீதியில் இறங்கி வேகம் பிடிக்கிறது. கார் போவதை பக்கத்து கடையில் நின்ற ஒருத்தன் கவனிக்கிறான். அருகில் சிகரட் பிடித்துக்கொண்டிருந்தவனுக்கு “ஆள் வெளிக்கிட்டான்” என்று சிங்களத்தில் சொல்ல, சிகரட்டை வீசி எறிந்துவிட்டு இருவருமே மோட்டர் சைக்கிளில் பின் தொடர்கிறார்கள்.
கார் பத்தரமுல்லவில் வசிக்கும் மனைவியின் வீட்டை அடைகிறது. இப்போது அவருக்கு தன்னை மர்ம நபர்கள் பின்தொடர்வது தெரிந்துவிட்டது. அவர் தன் அரசியல் நண்பர்களுக்கு மொபைலில் அழைக்கிறார். “எதுக்கு ரிஸ்க்?, அருகில் இருக்கும் போலீஸ் நிலையத்துக்கு உடனடியாக செல்லுங்கள்” என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள். “போலீஸிடம் போனால் கால தாமதமாகிவிடும். இன்றைக்கா இப்படி நடக்கிறது? அடிக்கடி தானே மிரட்டுகிறார்கள்” என்று நினைத்தபடியே காரை இரத்மலானையில் இருக்கும் அலுவலகத்தை நோக்கி செலுத்துகிறார்.
மோட்டார் சைக்கிள்கள் பின்தொடருகின்றன.
இல்லை. இது வழமையான ஒன்றில்லை. சம்திங் ரோங். அவருக்கு விளங்குகிறது. அவர் உடனேயே ஜனாதிபதியின் பிரத்தியேக வைத்தியருக்கு தொலைபேசி அழைத்து நிலைமையை விளக்குகிறார். வைத்தியரும் ஜனாதிபதிக்கு உடனேயே தொலைபேசி அழைக்க, ஜனாதிபதி வழிபாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது. இவர் வேறு சில நண்பர்களுக்கு அழைக்கிறார். பதில் இல்லை.
மோட்டார் சைக்கிள்கள் நெருங்குகின்றன.
இந்தா, இரத்மலானை வந்துவிட்டது. பின்னாலே தொடருகின்ற பல்சர்கள் பிர்ம் ப்ர்ம் என்று விரைகின்றன. வேகமாக போனால் அலுவலகத்துக்கு போய்விடலாம். கடவுள் இருக்கிறார். அவ்வளவு சீக்கிரம் ஒரு பாவமும் செய்யாதவனை சாகவிடமாட்டார். இப்படியான மிரட்டல்கள் அவருக்கு புதிதல்லவே. வீட்டுக்கு வந்து சுட்டார்கள். காரை மறித்து மனைவியையும் இவரையும் தாக்கினார்கள். அலுவலகத்தை உடைத்தார்கள். இவ்வளவு காலமும் தப்பினவருக்கு இது என்ன பிரமாதம்? நம்பிக்கை துளிர்விட, அக்ஸிலரேட்டரை அழுத்தியபடி விரைகிறார். பின்னாலே மர்மநபர்களும் தொடர, இவரும் வேகம் பிடிக்க, திடீரென்று முன்னாலே போன பொதுப்பெரூந்து ப்ரேக் போட, ஒன்றுமே செய்யமுடியாமல் இவரும் காரை நிறுத்தினார்.
மோட்டார் சைக்கிள்கள் காரை சுற்றி வளைத்து நின்றன. ஒருவன் இறங்கி டிரைவர் கண்ணாடியை சலிங்கென்று உடைத்தான். மற்றவன் பேப்பரால் சுற்றியிருந்த ஆயுதத்தை வெளியில் எடுத்தான். இவர் உள்ளே செய்வதறியாது திகைத்துப்போய் இருக்க கணநேரத்தில் எல்லாம் நடந்தது. கூரிய இரும்பு ஆயுதத்தால் குத்து ..காதுப்பக்கத்து மண்டை கிழிந்தது. சக் சக் சக் என்று. இவர் கதற கதற, திரும்ப திரும்ப குத்திவிட்டு அவர்கள் மோட்டர்சைக்கிளில் தப்பிச்செல்கிறார்கள். இவரின் மண்டையில் காயத்திலிருந்து இரத்தம் பாய்ந்துகொண்டிருந்தது. அருகில் நின்றவர்கள் அவரை அவசரமாக களுபோவில ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்செல்ல, அங்கே இருபது வைத்தியர்கள் இரண்டு மணிநேரமாக போராடியும் முடியாமல் தோற்றுப்போக,
இலங்கையின் மிகச்சிறந்த பத்திரிகையாளர், மனிதநேயம் மிக்கவர், தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று அனைத்து இனத்தவராலும் மதிக்கப்பட்ட சண்டேலீடரின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கா உயிர் பிரிகிறார்.
******************************
லசந்த விக்கிரமதுங்க என்ற பெயர் தொண்ணூறுகளில் அவ்வப்போது தமிழ் பத்திரிகைகளில் வரும் மொழிபெயர்ப்புகளால் தான் எனக்கு அறிமுகம் ஆனது. விக்டர் ஐவன், இக்பால் அத்தாஸ், லசந்த அவதானித்துக்கொண்டிருந்த போன்றவர்களின் கட்டுரைகள் அப்போது பிரபலம். பின்னர் கொழுப்புக்கு சென்றபிறகு, சண்டேடைம்ஸ் இல் இருந்து சண்டேலீடருக்கு மாறியதன் காரணமே லசந்த தான். யார் எவர் என்று பார்க்காமல் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் என எது நடந்தாலும், அதை சரியாக துப்பறிந்து புட்டு புட்டு வைக்கும் பத்திரிகை அது. அதிலே சுரணிமாலா என்ற புனைபெயரில் கட்டுரைகளை எழுதியவர் தான் லசந்த. அந்த பத்திரிகையில் பிரதம ஆசிரியர். அந்தப்பத்தி என்றில்லாமல் அந்த பத்திரிகையில் பல கட்டுரைகள் அவர் ஐடியாக்களிலேயே எழுதப்பட்டிருக்கும். லசந்த இன்றி லீடர் இல்லை.
லசந்த பின்னர் எம்டிவியில் குட்மோர்னிங் சிறீலங்கா என்ற நிகழ்ச்சியை செய்து வந்தார். நான் அதிகாலையில் அலுவலகத்துக்கு புறப்படும் வேளையில் பாணும் சம்பலும் சாப்பிட்டுக்கொண்டு பார்க்கும் நிகழ்ச்சி. அரசியல் பிரமுகர்களை தொலைபேசியில் அழைத்து காய்ச்சு காய்ச்சென்று காய்ச்சுவார், தேர்தல் நேரம் கட்சிகளுக்கிடையே மீடியேட்டராக நிகழ்ச்சி செய்வார். எந்த அரசியல்கட்சியின் சார்பிலும் இல்லாமலும், தகவல்களை மையமாக கொண்டு நடத்தும் நிகழ்ச்சிகள். பொதுவாக அரசாங்கம் தான் அகப்படும். துடுபெடுத்தாடுபவருக்கே பந்து வீசவேண்டும். பீலடருக்கு இல்லை என்பார். அது சந்திரிக்காவா, ரணிலா, மகிந்தவா, பிரபாகரனா என்றில்லை. தவறுகள், முறைகேடுகள் யார் செய்தாலும் லசந்தவின் பேனாக்கு தப்பியதில்லை.
அப்போது தான் ஆங்கிலத்தில் எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கு மேலோங்கியிருந்த காலம். லசந்த என்னைப்போன்ற சிறியவர்களுக்கு ஒரு ரோல் மொடல். இவரளவுக்கு தைரியமும் தில்லும் யாருக்கு வரும்? நாசூக்காக இவர் செய்யும் பேட்டிக்களை ஆவென்று பார்த்துவிட்டு அவர் போல நானும் ஒரு பேட்டி எடுத்தேன். என்னை லசந்த பேட்டி எடுப்பதாக. முழுக்க முழுக்க தொழில்நுட்பம் சார்ந்த கட்டுரை அது. ஆனால் சுவாரசியத்துக்காக அதை பேட்டி ஆக்கினேன். தொழில்நுட்ப பதிவுகள் எல்லாமே தூங்கிவழியுமாபோல தான் எழுதுவார்கள். அதை மாற்றவேண்டும் என்று செய்த ஐடியா. அதன் சில பகுதிகள் இங்கே. இது எழுதப்பட்டது 2007ம் ஆண்டு.
Lasantha : Hi JK, would you spend some time on an interview with me?
JK : Me ? With you, oh no, you are a very dangerous guy !
Lasantha : That's all past JK, Now I moved in to interview about these more safer WS vs REST arguments !
JK : Oh god, You will find it more difficult than your political interviews man. Anyway go ahead.
….
பின்னர் இரண்டுவருடங்களில் அவர் இறந்தபோது, எழுதிய குட்டி பதிவு. அப்போது யுத்தம் உச்சத்தில் இருந்த சமயம். எழுத புழுத்த பயம். சன் தளத்தில்பதிந்தது.
Yesterday, Lasantha was assassinated in Sri Lanka. While not commenting anything on the political motives, I believe he was one of those fearless journalists and it prompted me to search my archives to find this blog and post it here again.
Hope tomorrow will be a better day!
நான் என்றில்லை, என் அப்பாவும் லசந்தவின் மிகப்பெரிய ரசிகர். லசந்த கொல்லப்பட்டபோது இரண்டு நாட்களாக அப்சட்டாகவே திரிந்தார். கொஞ்சம் உளறுவாய். ஒருமுறை கொழும்பு பஸ்ஸில் பிரயாணம் செய்துகொண்டிருக்கும்போது, பக்கத்தில் இருந்தவ்ரோடு சிங்களத்தில் பேச்சு. “இந்த நாட்டை இப்படி கெடுத்திட்டாங்கள்” என்றிருக்கிறார். ஏன் என்று அவர் கேட்க, “தங்கட ஆக்களையே கொல்லுறாங்கள் .. இந்த லசந்தவை எல்லாம் மஹிந்த கொண்டிருக்கக்கூடாது” என்றிருக்கிறார். அது தான் தாமதம், பக்கத்திலிருந்தவர் திடீரென்று தனது சிஐடி அடையாள அட்டையை காட்டி கைது செய்வதாக சொல்லி மிரட்ட, அப்பா சமாளித்து தப்பியது தனிக்கதை.
******************************
கொட்டஹெனாவில் பிறந்தவர். அவரது தந்தை முன்னால் கொழும்பு பிரதிமேயர். லசந்த அந்தக்காலத்து சண் நியூஸ் குரூப்பில் வேலை பார்த்தவர். பின்னர் சட்டம் படிக்கும்போதே, அரசியல் தொடர்புகள் வருகிறது. சமகாலத்தில் ரணில், காமினி, அனுரா, விஜயகுமாரணதுங்க என்று எல்லோரின் சகவாசமும் கிடைக்கிறது. 89ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரக்கட்சி சார்பில் கொழும்பு வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் சமயத்தில் குமார் பொன்னம்பலம், அனுரா, ரத்வத்தை சகிதம் வன்னிக்கு இந்தியன் ஆர்மிக்கு தெரியாமல் செல்கிறார்கள். புலிகளோடு ஒரு டீலிங் முடித்துவிட்டு திரும்புகிறார்கள். இறுதியில் தேர்தலில் இவரும் தோல்வி. கட்சியும் தோல்வி.
மீண்டும் பத்திரிகைத்துறையில் நுழைகிறார். அங்கே தான் சுரணிமாலா அறிமுகம்.
இம்முறை சண்டேடைம்ஸ் பத்திரிகையில் வேலை. அப்போது சண்டேடைம்ஸ் ஆசிரியராக இருந்தவர் விஜிதா யாப்பா. அவர் தான் பின்னாளில் இலங்கையின் பிரபல புத்தககடைகளை நிறுவியவர். இங்கே தான் வாரம்தோறும் லசந்த எழுதப்போகும் பத்திக்கு புனைபெயர் தேடுகிறார்கள். பலரும் பலதை சொல்லி இறுதியில் மனைவி முடிவு செய்த பெயர் “சுரணிமாலா”. சுரணிமாலா துட்டகைமுனுவின் பிரதான படைத்தளபதி. நம்பர் டூ. பேனாவும் ஒருவித போராயுதமே என்ற எண்ணத்தில் நிஜமான துப்பாக்கி, கத்தி, ரவுடிகளோடு வெறும் பேனா மாத்திரம் கொண்டு போராடிய வீரன் தான் இந்த சுரணிமாலா. .. லசந்த.
சுரணிபாலா அப்போதைய ஜேவிபி, பிரேமதாசா என்று யாரை விடாமலும் தாக்கத்தொடங்கினார். பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜெரத்னவின் படுகொலைகள், பிரேமதாசா அரசாங்கத்தின் மந்திரிசபை பிரச்சனைகள் என எல்லாமே எப்படியோ வெளிவந்தது. யார் தகவல் கொடுக்கிறார்கள் என்று கடைசிவரைக்கும் தெரியவில்லை. பகடி என்னவென்றால், சுரணிமாலா யார் என்று நான்கு பேரைத்தவிர வேறு எவருக்குமே தெரியாது. லசந்த அதிகாலை ஐந்தரைக்கே விஜிதா யாப்பா வீட்டுக்கு சென்று கட்டுரையை கொடுத்துவிடுவதால், பத்திரிகை அலுவலகத்தாருக்கு கூட சுரணிமாலா யார் என்று தெரியாது. இறுதியில் லசந்த தான் சுரணிமாலா என்று ரஞ்சனு விஜெரத்னவுக்கு தெரியவந்தது. கொஞ்சநாட்களிலேயே சக பத்திரிகையாளரான ரிச்சர்ட் டி சோய்சா கொலை செய்யப்பட்டு, சடலம் ஆற்றங்கரையில் மிதக்க, லசந்த வேறு வழியில்லாமல் மெல்பேர்னுக்கு குடும்பத்தோடு தப்புகிறார்.
சில மாதங்களில், பிரேமதாசா இவருடைய உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க நாடு திரும்புகிறார். மீண்டும் சுரணிமாலா. 94ம் ஆண்டு, இவர், அண்ணன், மற்றும் மனைவியோடு சேர்ந்து சண்டேலீடர் ஆரம்பிக்கிறார்கள். எந்தவித அரசியல் சார்பும் இல்லாமல் அரசாங்கத்தின் ஊழல்களை, முறைகேடுகளை கிழித்து தொங்கப்போட்டது சண்டேலீடர். அதனால் அதற்கு விளம்பரங்கள் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருக்கவில்லை. அடிக்கடி மிரட்டல்கள். மானநஷ்ட வழக்குகள். குண்டுத்தாக்குதல்கள். அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. லசந்தவும் மனைவியும் தாக்கப்பட்டனர். வீட்டை தாக்கினர். ஆனால் லசந்தவோ ஒவ்வொருமுறையும் மீண்டும் மிடுக்குடன் எழுததொடங்கினார். Unbowed and Unafraid தான் லசந்தவின் தாரகமந்திரம்.
******************************
லசந்த, குமார் பொன்னம்பலத்துக்கு கீழே சட்ட உதவியாளராக வேலை பார்த்தவர். இலங்கையின் இனப்பிரச்சனை மீது ஓரளவுக்கு தெளிவான பார்வை உள்ளவர். ஆரம்பத்தில், ஒரே நாடு, போர் போன்ற விஷயங்களில் கொண்ட நம்பிக்கை காலப்போக்கில் மாறி, அதிகாரப்பரவலாக்கம் சார்ந்த தீர்வு கொடுப்பதன் மூலமே இனப்பிரச்சனையை தீர்க்கலாம். யுத்தம் ஒரு தீர்வல்ல என்று உறுதியாக நம்பத்தொடன்கினார்.
ஒருமுறை காலதாமதத்தை தவிர்க்க, நீதிபதி சி.வி.விக்னேஸ்வரனும் குமார் பொன்னம்பலமும் சிங்கள மொழியில் வழக்கொன்றை நடத்தியதை அவதானித்து ஆச்சர்யப்பட்டார். இரண்டு தமிழர்கள் சிங்கள மொழியில் நீதிமன்றில் வழக்கு பேசுகிறார்கள். அப்போது லசந்த சொல்லியதை விக்னேஸ்வரன் பதிந்திருக்கிறார்.
“Sir I have always felt that since the Tamil speaking people, both Tamils and Muslims have been for centuries the majority in the Northern and Eastern Provinces, the should have made Tamil the official language of those two provinces and Sinhala the official language of the other seven provinces or given parity of status to both languages! Its not the language, Sir, it matters! It is how you feel about the situation!”
இறுதிக்காலத்தில் மொத்த சிங்களவருமே யுத்தவெறியில் பிதற்றிக்கொண்டிருக்க, சொந்த மக்களையே குண்டுபோட்டு கொல்லுகிற அரசாங்கம் என்றும், யுத்தவெற்றி இனவெறியை தூண்டுகிறது என்றும், இவ்வளவு உயிர்களை காவுகொடுத்து ஒரு வெற்றி தேவை தானா என்ற ரீதியில் அவர் எழுதிய கட்டுரைகள் தான் அவர் உயிருக்கு உலைவைக்கும் ஆரம்பபடிகளாயின.
******************************
கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் கொழும்பில் பாதுகாப்பு நடைமுறைகள் மிக கடுமாயானதாக இருக்கும். அப்படியும் பல அரசாங்க ஸ்தாபனங்களில் அந்த நடைமுறைகளில் ஓட்டைகள் இருக்கும். ஒருமுறை பாதுகாப்பு செயலகத்துக்கே தனது நிருபர்களை, சாப்பாட்டு பெட்டியில் வயர்களையும், பட்டரிகளையும் வைத்துக்கொண்டுபோக உள்ளே எப்படியாவது நுழைய சொல்ல, அவர்களும் காவலர்களை ஏய்த்து உள்ளே நுழைய, அடுத்த வாரமே சண்டே லீடரில் பாதுக்காப்பு அமைப்பின் ஓட்டைகள் அம்பலமாகியது.
அப்போது பத்திரிகை தணிக்கை பலமாக இடம்பெற்ற காலம். எந்த பாதுகாப்பு சம்பந்தமான கட்டுரைகளும் பாதுகாப்பு செயலகத்துக்கு அனுப்பி தணிக்கை செய்யப்படவேண்டும். லசந்த இதை சமாளிக்க ஒரு உத்தி செய்தார். அது பலாலியை கைதடியில் இருந்து புலிகள் ஆட்லறி தாக்குதல் நடத்திய நேரம்.
“Heavy fighting was NOT raged in the Northern Jaffna Peninsula and Tigers were NOT pounding Palaly …”
“பலாலியில் சண்டை நடக்கவில்லை. புலிகள் கைதடியில் இருந்து ஆட்லரி வைத்து தாக்கவில்லை. ஏராளமான படையினர் கொல்லப்படவில்லை”
இப்படி இல்லை இல்லை இல்லை என்று போட்டே முழு கட்டுரையும் முடித்துவிட்டார். “சண்டை நடக்கவில்லை” என்ற செய்தியாகையால் தணிக்கைக்கைக்கும் அனுப்பவில்லை. செய்தி வெளியானது. அரசாங்கம் கடுப்பாகி பத்திரிகை அலுவலகத்தையே சீல் வைக்க, இவர் கேஸ் போட, நீதிமன்றம் அந்த தணிக்கை சட்டமே செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது. அதனால் அந்த சமயம் தடை செய்யப்பட்டிருந்த உதயன் பத்திரிகையும் வெளிவர ஆரம்பித்தது.
******************************
மகிந்தவுடனான லசந்தவின் நட்பு 89இல் சுதந்திரக்கட்சி சார்பாக இருவருமே தேர்தலில் போட்டியிடும்போது ஆரம்பித்தது. மகிந்த தேர்தலில் வென்றார். லசந்த தோற்றார். ஆனால் இருவருக்குமே சிறந்த நட்பு அப்போது உருவானது. மகிந்த அப்போது மனித உரிமைகளுக்காக போராடுவதாக காட்டிக்கொண்டவர். ஜேவிபி கிளர்ச்சி சமயம் அரசாங்கம் செய்த மனித உரிமை மீறல்களை தட்டிக்கேட்குமாறு ஐக்கியநாடுகள் சபை வரை சென்று மனுகொடுத்தவர். இப்போது இலங்கையின் இறையாண்மையில் ஏனைய நாடுகள் தலையிட கூடாது என்று ஊளையிடுவது தான் கேலிக்கூத்து. மகிந்த இலங்கையின் பிரதமாராக பதவியேற்றபோது சண்டேலீடர் மகிந்தவின் அந்த கடந்தகாலத்தில் நம்பிக்கை கொண்டு, அவரை வாழ்த்தி வரவேற்று கட்டுரை எழுதியது.
கொஞ்ச நாட்களிலேயே அந்த நம்பிக்கை தகர்ந்தது. சுனாமி நிதியாக வந்த கோடிக்கணக்கான பணத்தை மகிந்த தனது பினாமி கணக்குக்கு மாற்றியதை சண்டேலீடர் புட்டுவைத்தது. ஒரு கட்டத்தில் சந்திரிகா தலையிட்டு அந்த கணக்கை அரசாங்க நிதியத்துக்கு மாற்றுமளவுக்கு சண்டேலீடரின் கட்டுரைகள் அமைந்திருந்தன. இது சரிவராது என்று, ஜனாதிபதி தேர்தலில் தன்னோடு இணைந்து வேலை செய்யுமாறு மகிந்த தன் நரிப்புத்தியில் லசந்தவை கேட்க, லசந்த மறுத்துவிட்டார். மகிந்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட, தம்பிமார் நாட்டை கையிலெடுக்க, வடக்கே புலிகள் அரசாங்கத்துக்கு எதிரிகளாகினர். தெற்கே லசந்த தனிமனிதனாக அரசாங்கத்தின் எதிரியாக நிமிர்ந்து நின்றார்.
குருவாயூரப்பன் கோயிலுக்கு மகிந்தவும் மனைவி ஷிராந்தியும் செல்கிறார்கள். குருவாயூரப்பன் கோயிலில் இந்துக்கள் அல்லாத வேறு எந்த மதத்தவரும் வணங்ககூடாது. அது அவர்களின் நடைமுறை. வணங்கினால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும். கழுவவேண்டும் என்று ஒரு ஐதீகம். பௌத்தம் ஒரு மதமல்ல, அது ஒரு தத்துவஞானம் என்ற உட்டலாக்கடி இருப்பதால் பௌத்தர்கள் போய் அந்த கோயிலில் வணங்க அனுமதி உண்டு. ஆக மகிந்தவுக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவரின் மனைவி ஷிராந்தியோ ஒரு கிறிஸ்தவர். அது தெரியாமல் அவர்கள் வழிபட்டுவிட்டு வந்துவிட்டார்கள்.
இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. சண்டேலீடரும் இதுபற்றி எந்த செய்தியும் வெளியிடவில்லை. ஆனால் நிருபமாராவ், அப்போதைய இந்தியத்தூதர், இந்த விஷயம் கேள்விப்பட்டு, சிலவேளை இந்த செய்தி வெளியே கசிந்தால், கோயில் நிர்வாகிகள் பிரச்சனையாக்குவார்கள். நீங்கள் கவனமாக இருங்கள். குறிப்பாக சண்டேலீடருக்கு மட்டும் கசியக்கூடாது என்றிருக்கிறார். மகிந்த அதை தவறாக புரிந்துகொண்டு, சண்டேலீடர் ஏற்கனவே செய்தியை வெளியிட்டு விட்டது என்று நினைத்து, லசந்தவுக்கு தொலைபேசி அழைக்கிறார்.
ஒரு ஜனாதிபதி லசந்தவை அழைத்து சொன்ன வார்த்தைகள் வாய் கூச வைப்பவை. “உன்னை கொல்லாமல் ஓயமாட்டேன் பறையனே” என்று திட்டுகிறார். லசந்த திடுக்கிட்டுப்போய், விஷயத்தை விளக்கமுதலேயே, தொடர்ந்து தூஷணத்தால் திட்டு. இப்படி சண்டேலீடர் பத்திரிகையாளர்களை மகிந்த சகோதரர்கள் தூஷணத்தால் திட்டுவது பின்னரும் தொடர்ந்தது. லசந்தவின் கொலையை தொடர்ந்து ஆசிரியரான பிரடேரிக்கா ஜோன்ஸை கோத்தபாயா “பண்டி பீ தின்னும் நாயே” என்று ஏக தூஷணத்தில் திட்டியது எவரும் சீக்கிரம் மறக்கமுடியாது.
யுத்தம் சூடுபிடிக்கிறது. அந்தக்காலத்தில் நிகழ்ந்த அத்தனை ஆயுத கொள்வனவு மற்றும் மிகின்லங்கா ஊழல்களும் சண்டேலீடரில் அம்பலமாகிறது. அமைச்சரவை சந்திப்புகளில் நடக்கும் ரகசிய உரையாடல்கள் அடுத்தநாளே வெளியாகிறது. அரசாங்கம் யுத்தவெற்றியை கொண்டே அரசியல் நடத்தமுடியும் என்று பிரதமர் சொல்லியதும் பதிப்பில் வந்தது.
இப்படி ஒவ்வொரு கட்டுரைகளையும் எழுதும்போதே, ஆழ்மனதில் தன் முடிவுக்காலம் நெருங்குவதை லசந்த உணர்ந்துகொண்டார். தன் பிள்ளைகளை பார்க்கவென்று அடிக்கடி மெல்பேர்ன் பயணமானார். உயில் எழுதினார். திருமணம் முடித்தார். தன்னைக்கொல்லும் கணம் நெருங்கிவருகிறது என்று சொல்லிக்கொண்டு திரிந்தார். வீட்டில் அமானுஷ்யம் ஒன்று திரிகிறது, பிக்குவை கூப்பிடுவோமா என்று மகளிடம் கேட்கிறார். “கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் அரசாங்கம் என்னை கொலை செய்யும். அப்போது தான் மக்கள் அந்த கொலையை கண்டுகொள்ளமாட்டார்கள்” என்று தன் அண்ணனான லால் விக்கிரமதுங்கவுக்கு சொல்லுகிறார்கள்.
கிளிநொச்சி விழுந்தது. அடுத்த சிலநாட்களிலேயே லசந்தவும் கொல்லப்பட்டார்.
******************************
லசந்தவின் கொலைக்கு பின்னர் நடந்த கேலிக்கூத்துகள் ஏராளம். மகிந்தவை, லசந்தவின் கடைசி மகனும் தாயும், அழைப்பின் பேரில் சந்திக்கிறார்கள்.
“இந்த குட்டி பபாவுக்கு தன் அப்பாக்கு நடந்தது என்ன என்று தெரியவேண்டும் தானே, எப்படியும் விசாரித்து கண்டுபிடிப்போம்”
என்கிறார் மகிந்த. அடுத்தநாள் அவர்களோடு மகிந்த நின்று எடுத்தபடம் அரசாங்க பத்திரிகைகளில் வெளிவருகிறது. பிரச்சாரம்.
லசந்தவின் அண்ணா புத்திசாலி. கொலையாளிகளும் லசந்தவும் ஒரே பாதையில் தானே பயணம் செய்தார்கள். ஆக அந்த பாதையால் அந்த சமயத்தில் பயணம் செய்த மொபைல் தொலைபேசிகளை, இலத்திரனியல் பாதையை வைத்து தேடிக்கண்டுபிடிக்கலாம் தானே என்று போலிசுக்கு சொல்ல, வேறு வழியில்லாமல் போலிசும் டயலோக் நிறுவனத்திடம் இதை ஆராய சொல்லுகிறது. ஆராய்ந்த போது, ஐந்து தொலைபேசிகளின் பாதைகள் லசந்தவின் தொலைபேசி பயணித்த பாதைக்கு சமனாக, அதாவது நுகேகொட, பத்தரமுள்ள, நுகேகொட, கல்கிசை, இரத்மலானை பாதையூடான சிக்னல் பாதைக்கு சமனாக இருந்தன.
அந்த ஐந்து தொலைபேசிகளுமே ஒரே அடையாள அட்டையின் பேரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது! அடையாள அட்டையின் சொந்தக்காரர் ஒரு ஏழை நுவறேலியா கிராமவாசி. பெயர் ஜேசுதாசன். அர்த்தராத்திரியில் அவரை கைது செய்தார்கள். அவரோ ஆறு மாதங்களுக்கு முன்னமேயே அடையாள அட்டை தொலைந்து போனதாக போலீசில் பதிந்திருக்கிறார். தன்னோடு கூட மது அருந்துகின்ற சிங்கரெஜிமெண்டை சேர்ந்த ஆர்மிக்காரன் அதை எடுத்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கிறார். அந்த ஆர்மிக்காரனும் கைது செய்யப்படுகிறார். கைது செய்யப்பட ஆர்மிக்காரனோ, கொலைக்கு காரணம் பொன்சேகா என்ற ரீதியில் சாட்சியமளிக்கிறான்.
இன்னொரு விசாரணையில் அதே ஆர்மிக்காரன், தன்னை சிஐடி மிரட்டி அப்படி பொய்ச்சாட்சி சொல்லுமாறு பணியவைத்தார்கள் என்கிறான். அவன் கையெழுத்தையும் சிம்கார்டு நிரப்பிய விண்ணப்பபடிவ கையெழுத்தையும் ஒப்பிட்டுபார்க்குமாறு நீதிபதி சொல்லியிருக்கிறார். அந்த ஒப்பீட்டு அறிக்கை ஐந்து வருடமாகியும் நீதிமன்றில் இன்னமும் தாக்கலாகவில்லை.
ஒருநாள் சண்டேலீடருக்கு ஒரு மர்மநபர் வந்து அத்தனை கொலையாளிகளின் பெயர், தொலைபேசி இலக்கம் எல்லாவற்றையும் லசந்தவின் அண்ணாவிடம் கொடுத்துவிட்டு மறைகிறார். அண்ணனும் அதை போலீசிடம் கொடுக்க, போலீஸ் அதை தூக்கி குப்பையில் போடுகிறது.
சிலநாட்களில் அந்த நுவரெலியாவாசி ஜேசுதாசன் சிறையில் இருக்கும்போதே மர்மமான முறையில் மரணமானார் என்று செய்தி வருகிறது.
விசாரணை தொடர்கிறது!
******************************
“And Then They Came For Me”, என்று லசந்தவின் வாழ்க்கையை ரேய்னி விக்கிரமதுங்க தன் பார்வையில் எழுதியிருக்கிறார். இந்த நூல் சென்ற ஆண்டு வெளிவந்தது. கொழும்பில் நானும் மனைவியும் ஒருநாள் விஜிதாயாப்பா புத்தகசாலைக்கு போகிறோம். கடை மனேஜரிடம் சென்று லசந்தவின் பயோகிராபி வேண்டும் என்றேன். மனேஜர் ஒருமாதிரி கூர்ந்து பார்த்துவிட்டு இல்லை என்றார். ஏமாற்றத்தில் நான் திரும்பி நடந்தபோது அவர் பின்னாலே ஓடிவந்து “பெயர், டெலிபோன் நம்பர் தந்தால், ஓர்டர் பண்ணி எடுத்து தாறோம்” என்றார். நான் உடனே கொடுக்கப்போக, “உங்களுக்கு என்ன விசரா பிடிச்சிருக்கு?” என்று மனைவி திட்டி என்னை இழுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அந்தப்புத்தகம் இலங்கையில் விற்பனையில் இல்லை, உத்தியோகபூர்வமற்ற தடை என்பது பின்னர் தான் தெரியவந்தது.
பின்னர் மெல்பேர்ன் வந்த கையோடு இணையத்தில் ஓர்டர் பண்ணி வாங்கிய புத்தகம் தான் இது. இருநூறு பக்கங்கள். மூன்று நாட்களில், ஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம். அனைவரும் வாங்கி படிக்கவேண்டிய ஒரு சிறந்த மனிதனை பற்றிய புத்தகம்.
இலங்கையில் வாழ்பவர்கள் ரிஸ்க் எடுக்காதீங்கள்.
******************************
லசந்த இறந்தபின்னர் வெளியான சண்டேலீடர் பத்திரிகையில், அவர் இறப்பதற்கு முதல் எழுதிய கட்டுரை பிரசுரமானது. “என்னை அரசாங்கம் கூடியசீக்கிரமே கொலை செய்யும்” என்று எழுதிய கட்டுரை இரத்தத்தை உறைய வைக்கக்கூடியது. இப்படி எல்லோருமே உயிர்விடும்போது நீங்கள் பார்த்துக்கொண்டிருந்தால், உங்களை கொல்லவரும்போது யாருமே உதவ வரமாட்டார்கள் என்ற ஹிட்லர் கால வாக்கியத்தை அந்த கட்டுரையில் எழுதியிருந்தார்.
“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர்
நான் பேசவில்லை; காரணம் நான் யூதன் இல்லை.
பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்
நான் பேசவில்லை; காரணம் நான் கம்யூனிஸ்டு இல்லை.
பின்னர் அவர்கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந்தனர்.
நான் பேசவில்லை; காரணம் நான் தொழிற்சங்கவாதியும் இல்லை.
பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை”
Then they came for me--and there was no one left to speak for me.
என்று செல்லுகின்ற கட்டுரை இறுதியில் ஒன்றை சொல்லுகிறது.
“Let there be no doubt that whatever sacrifices we journalists make, they are not made for our own glory or enrichment: they are made for you. Whether you deserve their sacrifice is another matter. As for me, God knows I tried.”
ரிச்சார்ட் டி சொய்சா, நிமலராஜன் என்று கொல்லப்பட்ட மற்றும் திசநாயகம், பிரடேரிக்கா ஜோன்ஸ் போன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளான பத்திரிகையாளர்களின் சார்பாக லசந்த எழுதிய இந்த வாக்கியம் எப்போது நினைத்தாலும் இதயத்தை ஏதோ செய்யும். யாருக்காக? ஏன்?
******************************
லசந்தவின் பிள்ளைகள், கணேஷா, அகிம்ஸா, ஆதேஷ். அதுவும் கடைசி மகனின் முழுப்பெயர் ஆதேஷ் சவுரவ் ராகுல். கங்குலியும் டிராவிடும் கலக்கிக்கொண்டிருந்த காலத்தில் பிறந்த பிள்ளை என்று நினைக்கிறேன். லசந்த இறந்தபோது அகிம்ஸா மாத்திரம் அவரோடு இருந்தார். மற்ற இருவரும் தாயோடு மெல்பேர்னில் வசித்தார்கள். தகப்பன் கொல்லப்பட்ட செய்திகேட்ட மகள் அந்த இடத்திலேயே மயங்கிவிழுந்தவர் தான், பின்னர் தாய் வந்து கதவை தட்டும்வரை திறக்கவில்லை. லசந்தவின் சடலத்தோடு கூட அரை மணிநேரம் தனியாக கழித்தவர்.
ஒருவர் கொல்லப்படும்போது அவருக்கு பின்னால் இருக்கிற எத்தனை ஜீவன்கள், வாழ்க்கைகள், அந்த உணர்வுகள் கொல்லப்படுகின்றன. அது தமிழராக இருந்தால் என்ன? சிங்களவராக இருந்தால் என்ன? முஸ்லிமாக இருந்தால் என்ன? விடுதலைப்போராளி, ஆர்மிக்காரன், துரோகி, பத்திரிகையாளர், பொதுமகன் தொட்டு நாட்டின் அதிபர் வரைக்கும், எவராக இருந்தால் என்ன. ஒருவரின் உயிரை எடுப்பது எவ்வளவு கொடுமை?
லசந்த இறந்தசெய்தி கேட்டு, பிள்ளைகளும் தாயும் மெல்பேர்னில் இருந்து இலங்கை விரைகிறார்கள். சிங்கப்பூரில் இரண்டு மணிநேரம் காத்திருக்கிறார்கள். சிறியவன் ஆதேஷுக்கு அப்பா கொல்லப்பட்டது தெரியாது. சொன்னாலும் புரிந்து கொள்ளும் வயசில்லை. சின்னப்பிள்ளை. பிள்ளைக்கு தான் அப்பாவை சந்திக்கப்போகிறேன் என்று கொள்ளை சந்தோசம். தாயிடம் சொல்கிறான்.
“அம்மா .. ஊருக்கு போன உடனேயே அப்பா கீச்சங்காட்டி என்னட்ட நூறு கிஸ் வாங்கப்போறார்.. ”
சொல்லும்போதே அவனுக்கு கழுத்து கன்னம் காது எல்லாம் கூச தொடங்குகிறது.
எமக்கும் தான்.
******************************
உசாத்துணை
And Then They Came For Me
http://www.iamjk.com/2007/09/interview-on-soa-and-web-services.html
https://blogs.oracle.com/jkumaran/entry/soa_and_web_services_blog
படங்கள் : இணையம்
http://www.lasanthawickrematunge.com/