இது அறுபதுகளில் இடம்பெறும் கதை.
ஜீன் லூயிஸ் நியூ யோர்க்கில் வசிப்பவள். விடுமுறைக்கு தன்னுடைய சொந்த ஊரான மேகொம்புக்கு வருகிறாள்.
அமெரிக்காவின் தென்மாநிலமான அலபாமாவில் அமைந்திருக்கும் சிற்றூர் மேகொம்ப். தென்மாநிலங்களுக்கேயுரிய பழமைவாத, கொஞ்சம் பிற்போக்கான சிந்தனைகள் ஊறிய கொன்சர்வேட்டிவ் மனிதர்கள் வசிக்கும் ஊர். அங்கே வெள்ளையினத்தவருகிடையிலேயே சாதிப்பிரிவினைகள் இருக்கிறது. கறுப்பின நிற வேற்றுமையை கேட்கவே வேண்டாம்.
ஜீன் லூயிஸின் தந்தை அத்திக்கஸ் மேகொம்பின் ஒரு பிரபல வழக்கறிஞர். எல்லோராலும் மதிக்கப்படுபவர். அத்திக்கஸுக்கு எழுபது வயதாகிறது. அவரோடு அவருடைய தங்கை அலக்சாந்திராவும் வசிக்கிறார். அலக்சாந்திரா மேகொம்பின் அத்தனை குணாதிசயங்களையும் கொண்ட மேட்டுக்குடிப் பெண்மணி. கறுப்பினத்தவரையும் ஏனைய சாதியினரையும் எந்நேரமும் வெளியே தெரியாமல் நாசூக்காக ஏளனம் செய்துகொண்டிருப்பார். ஊரிலே அவர் வயதை ஒத்த ஏனைய பெண்களையும் சேர்த்து வாரம்தோறும் சந்தித்து ஊர்த்துலாவாரம் பேசுவார். ஜீன் லூயிஸையும் இப்படி உடுப்பு போடு, இப்படி நட, இப்படி பேசாதே என்று நிறைய கட்டுப்பாடுகள் போடுவார்.
ஜீன் லூயிஸின் சிறுவயது நண்பன் ஹென்றி. ஜீன் லூயிஸ் ஒவ்வொருவருடமும் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது இவன்தான் அவளின் காதலன். ஊர்க் காதலன்! ஒவ்வொருமுறையும் தன்னை திருமணம் முடிக்குமாறு ஜீன் லூயிஸை அவன் வற்புறுத்துவான். அவளோ பிடி கொடுக்கமாட்டாள். ஹென்றியும் ஒரு வழக்கறிஞன்தான். அத்திக்கஸின் உதவியாளனாக பணியாற்றுகிறான். இன்னொருவர் அங்கிள் ஜக். அத்திக்கஸின் சகோதரர். புரிந்துணர்வுள்ள பக்குவப்பட்ட மனிதர்.
இந்த பாத்திரங்களைச்சுற்றித்தான் கதை சுழல்கிறது.
மேலும் வாசிக்க »