"மீசை வைத்த கேயிஷா"சிறுகதைக்கு கிடைத்த கருத்துகள்.
சுபாசிகன்
ஆஹா! என்ன சொல்வது.... கற்பனையில், போனபோக்கில், flow இல்லாது எழுதியது போல் தோன்றினாலும், இப்படி எழுதியதே அழகாக இருக்கிறது. மனதின் உண்மைகளை அப்பட்டமாக்குகிறது. ஒவ்வொரு வரியும் அனுபவித்து வாசித்தேன். ஜே.கே., ஒன்று சொல்ல வேண்டும். நான் அழகிய அம்மன் சிலைகள்/படங்களை ஒரு ஆண் இண்டிமேட் உணர்வு கொண்டு பார்த்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனையோடு அணுகியிருக்கிறேன். இரசித்திருக்கிறேன்.
'இயற்கைக் கடன்கள் எதுவாயினும் அக்கர்மாக்கள் நிறைவேற்றும் போது உச்சம் கிடைக்கிறது. தவம். கொண்டாட்டம். கட்டுடைத்தல்'. எவ்வளவு உண்மை. ஆறாவது அறிவின் பலன், மனிதனுக்கு எல்லாம் எந்திரமயமாகவோ, மேம்போக்காகவோ ஆகிவிட்டது .
இப்போது வசந்தகாலம். பறவைகளின் கொண்டாட்டம் பார்த்திருக்கிறீர்களா? எது பற்றியும் கவலையில்லாத காதல். வீட்டைச்சுற்றி நிறைய 'மக்பை'பறவைகள். மௌனமாக அவைகளின் களிப்பைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். நேற்று, நாளை, உறவு, சொந்தம் எது பற்றியும் பயமற்ற, எல்லாமற்ற நிலை. ஏகாந்தம்! கடவுளைக் கும்பிடும்போது கூட இந்தப் பொறுமை கிடைப்பதில்லை. காதல் காட்சி கையெடுத்துக் கும்பிடத்தக்கது.
*******************
கேதா
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
கேயிஷாவை நேற்று இரவு வாசித்தது முடித்தேன்.
வழக்கமாக உங்கள் கதைகளில் இருக்கும் நதி போன்ற ஓட்டம் இதில் உணரவில்லை. அமைதியான ஏரியில் படகு வலிப்பது போலிருந்தது. கதை என்னை நகர்த்தவில்லை, கதையில் நானே நகர்ந்துகொண்டிருந்தேன்.
சில வருடங்களுக்கு முன் சிறுகதையை எப்படி உருவாக்குகிறீர்கள் என்று யசோ அக்கா கேட்ட்தாக நீங்கள் சொன்னது நினைவிருக்கிறது.
இந்த கதை அதற்கான பதிலை சொல்கிறது என்று நினைக்கிறேன்.
எழுத்தின் வேறுபட்ட வடிவங்களை வாசகனுக்கு உணர்த்தும் ஒரு பயணமாகவே இதைப் பார்க்கிறேன்.
எல்லா வேறுபாடுகளையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. காரணம் என் மட்டுப்படுத்தப்படட வாசிப்பனுபவம். இருந்தாலும் இயல்பான கேயிஷா, பூதக்கண்ணாடியால் படைக்கப்பட்ட கேயிஷா, களையப்படட ஆடைகளை மட்டும் காட்சிப்படுத்தி கற்பனைக்கு இடம் கொடுத்தல் போன்ற வேறுபாடுகளை உணர்ந்தேன், இரசித்தேன்.
கேயிஷாவிற்கும் சிவாவிற்குமான உறவு, படைப்பாளிக்கும், கருப்பொருளுக்குமான உறவாகவே படுகிறது. படைப்புகள், உருவான பின் பறவைகள் காவிச்செல்லும் விதைகளை போல எங்கோ போய் விழுகின்றன. சில விருட்ச்சமாகலாம், சில வீணாகலாம். படைப்புகளும், படைப்பாளியும் பேசிக்கொள்ளும் விதத்தை இரசித்தேன்.
இதில் பணம் எதற்காக படிமம்? இந்த இடத்தில் நான் குழம்பிப்போகிறேன்.
அப்படி என்றால் சிவா படைப்பாளியா வாசகனா?
சிந்தனையை கிளறி, மண்டையை காயவைத்து,
இப்பிடி ஒரு பத்தி எழுதவச்சு, எட் சட் ரா, எட் சட் ரா.....
*******************
ரோசி கஜன்
உலகின் அத்தனைக் காதலையும் விட உயர்ந்த காதலில் கட்டுண்டு மணம் புரிந்த கணவன் மனைவி ...ஐந்து ஆண்டு மணவாழ்வின் பின் இன்றைய நிலை என.. ஆரம்பத்தில் இதைக்காட்டி ...இப்படியான நிகழ்வுகளுக்கான காரண காரியங்களை அலசுவதாகவே மீசை வைத்த கேயிஷா எனக்குத் தெரிந்தாள்.
அதிஉயர்ந்த காதல் என்ற உணர்வில் மூழ்கியிருக்கையில் புலப்படுவது எல்லாமே அதன் மயக்கத்தின் தாக்கத்தில் உயர்வாகவே பட்டுத் தொலைக்கும்.
அங்கு வெற்றுப் பார்வை இருப்பதில்லை.
அது எத்தனை நாட்களுக்கு !
ஒரு கட்டத்தில் சலித்துப் போகையில் என்னாகும்.
அதோடு, ஏதோவித கட்டாயத்தில் இணைகையில் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதையும் தொட்டுச் செல்கின்றது.
ஆரம்பத்தில் அழகாக பிடித்தமாக இல்லையென்றாலும் மனதை ஏமாற்றி அதை விரும்புவதும், போகப் போக அடிக்கடி நிஜத்தின் தலையீட்டால் ஏற்படும் விரிசலும் ...சலிப்பும் ..முடிவில் தனித் தனித் தீவுகள்.
‘பூதக்கண்ணாடி இல்லாத வெற்றுக் கண்ணால், புனைவின்றி, கனவோடை இன்றி, தம் விருப்பு வெறுப்புகளின் தாக்கமின்றி, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமின்றி எத்தனைபேரால் தம் இணையை பார்க்கவும் புரியவும் ஏற்கவும் முடிகின்றது. (இது கதையில் வருது.. எனக்கு இந்த இடம் மிகவும் பிடித்தது.)
அவளை/னை அவர்தம் இயல்புகளோடு ..அப்படி அப்படியே ஏற்க முடிந்தால்..
இங்கு சிவாவுக்கு, பெண்ணை மீசை வைத்துப் பார்க்கப் பிடிக்குது. அது அவளுக்கு அழகாக இருப்பதாக எண்ணுகிறான் அவன். அதே, மீசை வைத்துக்கொள்ள அவளுக்கு பிடிக்குமா என்று அவன் யோசிக்கவில்லை ..
வாசிக்கையில் ஆங்காங்கே நம்மில்உள்ள சிவாக்களையும் கேயிஷாக்களையும் தரிசிக்கலாம்.
*******************
ஜெயதர்சினி
இப்ப தங்கட பிள்ளையத் தாங்களே பெத்துக்கிறாங்க. அதோட பொம்பிள்ளபிள்ளைக்கு அதிகம் சிலவழிக்கவேண்டியிருக்கு. ஆம்பிளப்பிள்ளைக்கு சீதனம் குடுக்கோணும். மாப்பிள்ளையோ பொண்ணோ பார்க்கும்போது ஐகியூ கூடிய ஆக்களை தெரிந்து காசு குடுத்துச் செய்யூறாங்க. படிச்ச அழகான வசதியான வேலைக்குப் போகிற குணமான ஆள் எண்டு தேடுறாங்க. அப்பத்தான் சந்ததி அப்பிடி வரும் எண்டு. ஆனா தங்கட சைடு எப்பிடி எண்டு பாக்கிறேல்ல. கதையில் பெற்றோர் தாங்கள் வளர்க்கிற பிள்ளை குறிப்பிட்ட குணங்களோட இருக்கோணும் என்று யோசிக்கிற மாதிரி, இப்ப தங்கட பேரப்பிள்ளைகள் இப்பிடி இருக்கணும் எண்டு தாத்தா பாட்டிகள் நினைக்கிறாங்க.
ஆனா இது நல்ல ஐடியா ஒய். இப்பத்தைய இனப்பெருக்க வடிவத்தின் தேர்ந்த செயன்முறை. ப்பா. பீலிங்காவது மண்ணாங்கட்டியாவது. எங்களுக்கு எல்லாமே வேணும். பெர்பெக்டாக வேணும். எங்கடையானதா இருக்கணும் எண்டு தேவையில்லை.
*******************